‘பிரதமர் மோடியையும் தமிழக மக்களையும் பிரிவினைவாத அரசியல் மூலம் தி.மு.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது’ என தமிழக பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ.க. மாநிலச் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பிரதமர் மோடிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவை யாராலும் பிரிக்க முடியாது!

பீகார் மக்களுக்கு எதிராக தி.மு.க.வினர் செய்த பிரிவினைவாத அரசியலை சுட்டிக்காட்டிய பிரதமரை கொச்சைப்படுத்துவதா? தமிழ், தமிழகம், தமிழர்களின் உயர்வுக்கு பாடுபட்ட பிரதமர் மோடி மீது அவதூறு பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும், பிரதமர் மோடி வீற்றிருப்பதை தடுக்கவும் பிரிக்கவும் முடியாது!’’ என்றவர்,

‘‘தமிழகத்தில் கடந்த காலங்களில் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கூட்டணிக் கட்சிகள் மற்றும் பிரிவினைவாதம் பேசும் நாம் தமிழர் உள்ளிட்ட தி.மு.க. ஆதரவு இயக்கங்கள், தமிழகத்தில் பிழைப்பு தேடி வந்த, வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களை விரட்டி அடிக்க வேண்டும் என்று கூறியதை தமிழக மக்கள் அறிவார்கள்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காணொலியில், தமிழகத்தில், பீகார் மக்கள் தி.மு.க.வினரால் துன்புறுத்தப்படுகின்றனர் என்று, பிரதமர் மோடி பேசி இருப்பது தான் இருக்கிறது.

பிரதமர் மோடியின் பேச்சைத் திரித்து, வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில், வேறு மாநிலத்தில் பிறந்து, தமிழகத்திற்கு வந்து, தொழிலாளர்களாக தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி, தமிழக மக்களின் அன்பிலும், ஆதரவிலும் தொழிலாளிகளாகவும், சிறு குறு தொழில் அதிபர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் வட இந்திய மக்களை, தேர்தல் ஆதாயத்திற்காக தாக்கி, இழிவுபடுத்தி, பிரிவினைவாதம் பேசியதை தி.மு.க. தற்போது வசதியாக மறந்து விட்டது.

பிரதமர் மோடி நேற்று பீகார் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், உண்மைகளை சுட்டிக் காட்டியவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழர்களுக்கு எதிராக பிரதமர் மோடி பேசியதாக, அவதூறு கூறி, நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் நடத்துவதை மக்கள் நன்கு அறிவார்கள்.

மேலும் காங்கிரஸ், இண்டி கூட்டணியில் அங்கம் வகித்து, திடீர் தேசியம் பேசும் திராவிட மாடல் தி.மு.க. ஆட்சியில் மட்டுமின்றி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் பீகார் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகி துன்புறுத்தப்படுகிறார்கள் என்று பிரதமர் மோடி பேசி இருப்பதைத் திரித்து, பா.ஜ.க.வினர் தேர்தல் அரசியலுக்காக தமிழர்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்துவதாக, முதல்வர் ஸ்டாலின் பொய் பிரச்சாரம் செய்வதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி தமிழ் மகனாய், தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் ஆற்றிய பங்கை யாரும் மறந்து விடவும் மறைத்து விடவும் முடியாது. தமிழின் தொன்மையை, திருக்குறளின் மகத்துவத்தை, செங்கோலின் பெருமையை உலகெங்கும் கொண்டு சென்று தமிழர்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் வீற்றிருக்கும் பிரதமர் மோடிக்கும் தமிழர்களுக்கும் இருக்கும் தொப்புள் கொடி உறவை யாராலும் பிரிக்க முடியாது.

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல், அரசியல் படுகொலைகள், விலைவாசி உயர்வு, போதை கலாச்சாரம், பாலியல் குற்றச் சம்பவங்கள் என சமூக விரோத செயல்கள் அதிகரித்து, தி.மு.க. அரசின் மீது மக்கள் கோபப்படும் நேரத்தில், மக்களைத் திசை திருப்பி தேர்தல் அரசியலுக்காக பிரிவினையைத் தூண்டி வருகிறது. இதுதான் தி.மு.க.வின் வழக்கமும் கூட.

தற்போது, நகராட்சி நிர்வாகத் துறையில் ரூ.888 கோடி ஊழல் நடந்திருப்பது வெளியானவுடன், அதனை மறைக்கும் முயற்சியைத் தற்போது தி.மு.க. தொடங்கியுள்ளது. இப்படி எத்தனை நாடகங்களை தி.மு.க. அரங்கேற்றினாலும், தமிழக மக்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும், அண்ணனாக, தம்பியாக, தந்தையாக, மகனாக பிரதமர் மோடி வீற்றிருப்பதை யாராலும் தடுக்கவும் பிரிக்கவும் முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal