முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கு எதிரானவர் எடப்பாடி பழனிசாமி என்ற மாயத் தோற்றத்தை, அ.தி.மு.க.வில் இருப்பதாக கூறிக்கொள்பவர்களை (ஓ.பி.எஸ்., டி.டி.வி.) வைத்தே தி.மு.க. உருவாக்கி வருவதை பசும்பொன்னில் உடைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இது பற்றி அ.தி.மு.க.வில் உள்ள முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நடுநிலையானவர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலம்தொட்டு தென் மாவட்டங்களில் பெருவாரியாக வாழும் முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் இரட்டை இலைக்கே கிடைத்துவந்தன. திமுகவினரின் பி டீமாக செயல்படும் ஒருசிலருடைய உண்மையான நோக்கத்தை இபிஎஸ் அம்பலப்படுத்தியதையடுத்து, முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வருவதை பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா உறுதிப்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, இந்த வலிமையான பிணைப்புக்கு குந்தகம் ஏற்பட்டதைப் போல் சிலர் கட்டுக் கதைகளை கிளப்பிவிட்டனர். சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் திமுகவின் பி டீமாக இருந்துகொண்டு இந்த வதந்திகளை பரவவிட்டனர். அதனாலே 2023-ம் ஆண்டும் தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி சென்றபோது, அவருக்கு எதிராக ஒரு சிலரை தூண்டிவிட்டு எதிர்ப்பைக் காட்டினார்கள்.
ஆனால் முக்குலத்தோருக்கு அதிமுகவில் உரிய மதிப்பும், மரியாதையும் இபிஎஸ் கொடுத்துவந்த காரணத்தால், ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி கொண்டுவர முயற்சிக்கிறார் என்பது வீண் பழி என்பது உறுதியானது. கட்சியின் பொருளாளர் மற்றும் சட்டமன்ற துணைத் தலைவர் பதவிகளில் முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய முக்கியத்துவத்துவம் வழங்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தபோது, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருதை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்கவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திவருகிறார்.
இதைக் கண்டு அதிர்ந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ‘‘தென் மாவட்டங்களில் ஒற்றுமையை குலைக்கும் வகையில் இபிஎஸ் இந்த வெற்று வாக்குறுதியை தந்துள்ளார்”என்று பேசினார். ஆனால், “தேவருக்கு பெருமை சேர்ப்பது தினகரனுக்கு பிடிக்கவில்லை”என்று அச்சமூக மக்களே தினகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
தங்கள் சொந்த சுயலாபங்களுக்காகவும், கோஷ்டி அரசியலுக்காகவும், திமுகவை ஆட்சியில் அமரவைப்பதற்காகவும் தினகரன், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் முக்குலத்தோர் சமூகத்தைப் பயன்படுத்துவதை அந்த மக்கள் உணர்ந்துகொண்டனர். இதன் விளைவாக எடப்பாடி பழனிசாமிக்கு, இந்த ஆண்டு பசும்பொன்னில் மிகச்சிறப்பான வகையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தேவர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியை மடைமாற்றி, தாங்கள் கூட்டணிக்கான அரசியல் களமாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்றவர்கள் மாற்றியதை யாரும் ரசிக்கவில்லை.
அந்த புனிதமான இடத்தில் தேவையற்ற அரசியல் கருத்துகளை பேசாமல் நகர்ந்த எடப்பாடியார் மீது மக்களுக்கு அபிமானம் கூடியிருக்கிறது. அதன்பிறகு மதுரைக்குச் சென்று அரசியல் எதிரிகளின் துரோகத்தால் 2021 தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது என்பதை ஆதாரத்துடன் எடுத்துக்கூறினார்.
மத்தியில் பாஜக அரசில் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி, சட்டமன்ற தேர்தலுக்குள் தேவர் பெருமகனாருக்கு பாரத ரத்னா விருது கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு முக்குலத்தோர் சமூகத்தினருக்கு வரும் தேர்தலில் அதிக முக்கியத்துவம் தரும் வகையில் தேர்தல் அறிக்கை தீட்டுவதற்கு வியூகம் வகுத்துவருகிறார்’’ என்றனர்.
ஆக மொத்தத்தில் முக்குலத்தோர் வாக்குகளை அ.தி.மு.க.விற்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் தி.மு.க.வும், அதற்கு உறுதுணையாக இருக்கும் ஓ.பி.எஸ்., டி.டி.வி. போன்றோருக்கு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி ஷாக் கொடுக்க காத்திருக்கிறார்.

