‘புஸ்ஸி ஆனந்தை மீறி த.வெ.க.வில் எதுவும் செய்ய முடியவில்லை’ என விஜய்யின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோவை அப்போது கண்டுகொள்ளாத விஜய், தற்போது அதன் வீரியத்தை உணர்ந்திருக்கிறார்.
கரூர் சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு பின் ஒரு வழியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை வரவழைத்து சந்தித்துள்ளார் தவெக தலைவர் விஜய். மாமல்லபுரம் ரெசார்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பரிமாறிய விஜய், அவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கிறார். இதனிடையே விஜய்யின் அடுத்தக் கட்ட அரசியல் செயல்பாடுகள் குறித்த பேச்சுகளும் அடிபட தொடங்கி இருக்கின்றன.
கரூர் சம்பவத்திற்கு பின் ஒரு மாதமாக பனையூர் அலுவலகம், வீடு என்று மட்டுமே தொடர்ச்சியாக விஜய் பயணித்து வந்தார். அப்போது தவெக கட்சி நிர்வாகிகளுடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்களை நடத்தி இருப்பதாக தெரிகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உடன் இல்லாத போது, தவெக நிர்வாகிகளுடன் விஜய் பேசிய போது சில அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.
கரூர் சம்பவத்திற்கு தவெகவின் 2ஆம் கட்டத் தலைவர்களின் அனுபவமில்லாத செயல்பாடுகளும் ஒரு காரணம் என்று விஜய் நம்புவதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்டச் செயலாளர்களுடன் நடந்த ஆலோசனையின் போது கரூர் சம்பவம் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. அப்போது சம்பவத்திற்கான காரணத்தையும், தவறுகளையும் ஆராயாமல், ஒவ்வொரு நபரும் மற்றவர்கள் மீது குற்றம்சாட்ட தொடங்கி இருக்கின்றனர்.
மாவட்டம், ஒன்றிய அளவில் தவெக நிர்வாகிகளின் செயல்பாடுகளை அறிய காத்திருந்த விஜய்க்கு, இவர்களின் நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனிடையே தவெக மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் தொடர்பாக விஜய்யின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஒரு ரிப்போர்ட்டை தயார் செய்திருக்கிறார்.
அந்த ரிப்போர்ட்டில் 70 மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லை என்றும், மாவட்டச் செயலாளர்கள் பலரும் திமுகவினருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டிருக்கிறது. அதேபோல் சில மாவட்டச் செயலாளர்கள் பணிகளை மேற்கொண்டாலும், அவர்களால் திமுகவுக்கு இணையான செல்வாக்கோ, பண பலமோ இல்லாததையும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை கவனித்த விஜய், மாவட்டச் செயலாளர்களையும் கண்காணிக்க தனியார் ஏஜென்சியை நாடி இருப்பதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள விஜய்க்கு நம்பகமான ஏஜென்சியிடம் பணியை கொடுத்துள்ளதாகவும், மாவட்டச் செயலாளர்களின் ஒவ்வொரு வார செயல்பாடுகளை ரிப்போர்ட்டாக அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘ஒரு அரசியல் கட்சியை வழிநடத்துவது அவ்வளவு எளிதல்ல’ என துரைமுருகன் சொன்னதை விஜய் புரிந்துகொள்வாரா..?
