தமிழக வெற்றிக் கழகத்திற்கு விஜய் சின்னத்தை தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. எந்த சின்னத்தை தலைவர் தேர்ந்தெடுப்பார் என த.வெ.க.வினர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
நடிகர் விஜய் தவெக கட்சி தொடங்கி இரண்டு வருடங்களாகிவிட்டன. இரண்டு வருடங்களில் விஜய் மிக சில நாட்கள் மட்டுமே அரசியல் களத்திற்கு வந்துள்ளார். கட்சியின் 2 மாநாடுகள், பூத் கமிட்டி கூட்டம், பொதுக்குழு கூட்டம், அம்பேத்கர் புத்தகம் வெளியீட்டு விழா, ஆளுநர் சந்திப்பு, பனையூர் சென்றது, ஒரு போராட்டம் என்று அவரின் வருகையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஜனநாயகன் படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் முழு நேரம் அரசியலில் இறங்க போவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் அவர் மாவட்டம் வாரியாக மக்களை சந்திக்க தொடங்கினார். திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் விஜய் பிரச்சாரம் செய்தார். கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திடீரென நெரிசல் ஏற்பட்டு 41 மக்கள் உயிரிழந்தனர்.
தவெக சார்பில் இழப்பீடு அறிவிக்கப்பட்டாலும், விஜய் உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிர்வாகிகள் யாரும் கரூர் மக்களை நேரடியாக சந்திக்காமல் உள்ளனர். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய பிறகு தான் தவெகவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வெளியில் வரத்தொடங்கினார்கள். இப்போது வரை விஜய் கரூர் கூட்ட நெரிசலில் பாதித்த மக்களை வீடியோ காலில் மட்டுமே ஆறுதல் கூறியுள்ளார்.
கடந்த ஒரு மாதங்களாக தவெக மற்றும் விஜய்யின் செயல்பாடு முற்றிலும் முடங்கியுள்ளது. தவெகவுக்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ஒரு அரசியல் கட்சி என்றால் அவர்களின் சின்னம் மிகவும் முக்கியம். மக்கள் மனதில் பதியும் வகையில் சின்னங்களை தேர்வு செய்வார்கள். திமுக உதய சூரியன் சின்னம், அதிமுக இரட்டை இலை சின்னம், காங்கிரஸ் கட்சி கை சின்னம், பாஜக தாமரை சின்னம் ஆழமாக பதிந்துள்ளது.
இந்நிலையில் தவெகவும் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்களிடம் எளிதில் கொண்டு செல்லும் வகையில் ஒரு சின்னத்தை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். தேர்தலில் பெண்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் 5 சின்னங்களை தவெக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தவெக 5 சின்னங்களை தேர்வு செய்து, வருகிற நவம்பர் 6 ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் சமர்பிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆட்டோ, பேட், பட்டம், உலக உருளை, தொப்பி, அகல் விளக்கு உள்ளிட்ட பல்வேறு சின்னங்களில் இருந்து ஐந்து சின்னங்களை தேர்வு செய்து, அவற்றில் ஒன்றை தங்களுக்கு ஒதுக்க சொல்லி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் தவெகவுக்கு விரைவில் சின்னம் ஒதுக்கப்படும் என்று அந்தக் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த தகவல் தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
