தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனாவுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை குறைக்கும் வேலையில் புஸ்ஸி ஆனந்த் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

2026 சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகம் செயல்பட்டு வருகிறது. கரூர் சம்பவத்திற்கு பின் கடந்த 25 நாட்களாக தவெக தலைவர் விஜய் மவுனம் காத்து வரும் நிலையில், அக்கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள்.. ஏன் மாவட்டச் செயலாளர்கள் கூட என்ன செய்வதென தெரியாமல் தடுமாற்றம் அடைந்துள்ளனர்.

அதேபோல் கட்சித் தொடங்கப்பட்டு சுமார் 2 ஆண்டுகளாகிவிட்ட நிலையிலும், இதுநாள் வரை கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கூட விஜய் முழுமையாக உருவாக்கவில்லை. 120 மாவட்டச் செயலாளர்கள் என்று அறிவித்துவிட்ட நிலையில், இதுநாள் வரை மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு ஒரு நிர்வாகியை கூட நியமனம் செய்யவில்லை. விஜய் ரசிகர்களாக இருந்த பலரும், தவெகவின் தொண்டர்களாக மாறிவிட்ட நிலையில், அவர்களை அரசியல்படுத்த வேண்டிய விஜய் பொறுப்புகளை தனக்கு நம்பிக்கையானவர்களிடம் விட்டுச் சென்றுவிட்டார்.

ஆனால் நம்பிக்கையானவராக கருதப்பட்ட தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழக்கிற்கு பயந்து தலைமறைவாகியது அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கரூர் சம்பவத்திற்கு பின் தவெக தலைவர் விஜய் உடன் இருக்கும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்டோருக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது பற்றி த.வெ.க.வில்¢ இருக்கும் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ‘‘சார். விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியவுடன் திராவிடக் கட்சிகளில் கோலோச்சி முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைய முயற்சி செய்தனர். இதனை புஸ்ஸி ஆனந்த் தடுத்து வந்தார். காரணம் தனக்கான முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் அரசியலில் முதிர்ந்தவர்களையும், அனுபவசாலிகளையும் த.வெ.க.வில் இணையவிடாமல் தடுத்து வந்தார் புஸ்ஸி ஆனந்த்.

கரூர் சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவான புஸ்ஸி ஆனந்த் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் வெளியே வந்தார். உச்சநீதிமன்றத்தில் இப்படியொரு தீர்ப்பு வருவதற்கு காரணமாக இருந்தவர் ஆதவு அர்ஜுனா. அதனால், ஆதவ் அர்ஜுனா மீது விஜய் அதிக நம்பிக்கை வைக்கத் தொடங்கினார். இது புஸ்ஸி ஆனந்துக்கு பிடிக்கவில்லை. இதனால், ஆதவ் அர்ஜுனாவை த.வெ.க.வில் இருந்து ஓரங்கட்டும் வேலையை செய்து வருகிறார்.

தவிர, மற்ற கட்சிகளில் இருந்து வரும் செல்வாக்குள்ள முக்கிய நிர்வாகிகளை இனியாவது த.வெ.க.வில் இணைத்துக்கொள்ளவேண்டும். இந்த வேலைகளில் விஜய் நேரடியாக கவனம் செலுத்தினால் மட்டுமே, த.வெ.க.வால் அடுத்த கட்டத்திற்குப் போக முடியும்’’ என்றனர்.

என்ன செய்யப் போகிறார் விஜய்…? இனியாவது வெளியே வந்து அரசியலில் அனுபவம் வாய்ந்தவர்களை சந்திப்பாரா..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal