கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு உத்தரவு பிறப்பிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜஸ் ரஸ்தோகி தலைமையிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர்களில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு காவல் துறை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே காரணம் என எதிர்க்கட்சிகள் தமிழக அரசு மீது விமர்சனங்களை முன் வைத்தன.

அதே நேரம் காவல் துறை கட்டுப்பாடுகளை விஜய் பின்பற்றவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் அவர் சொன்ன நேரத்திற்கு வரவில்லை என்றும் சொல்லப்பட்டது. இந்த விவகாரம் குறித்து கரூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தவெக விவகாரம் தொடர்பான ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கரூர் போலீஸார் விசாரணைக்கு தடை விதித்தது. மேலும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அடுத்த நாளே அஸ்ரா கார்க்கும் கரூர் சென்று விசாரணையை தொடங்கினார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தவெக தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (அக்.10) மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உத்தரவிட்டது தவறு என்றும் கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்றும் முறையிட்டனர். அது போல் காவல் துறை தரப்பு சார்பில், “விஜய் நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததே காரணம். மேலும் அஸ்ரா கார்க் ஒரு நேர்மையான அதிகாரி” என்று வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு, “இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவும் முரண்படுகின்றன. இதில் நீதிமன்ற நடைமுறைகள் ஏதும் கடைப்பிடிக்கப்படவில்லை” என கூறி வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவித்தனர். அதாவது கரூர் உயிர்பலி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும், நீதிபதி அஜஸ் ரஸ்தோகி தலைமையிலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து தி.மு.க. வழக்கறிஞர் சரவணன் கூறும்போது, ‘‘சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது தமிழக அரசுக்கு பின்னடைவு கிடையாது. ஆனால், த.வெ.க. நேரடியாக பா.ஜ.க.வின் கட்டுப்பாட்டுக்குப் போய்விடும்’’ என்றார்.

அ.தி.மு.க. வழக்கறிஞரும், எம்.பி.யுமான இன்பதுரை, ‘‘இந்த தீர்ப்பு தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு’’ என்றார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal