‘‘ துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாசிச கொடுங்கோலர்கள் ஹிட்லர், முசோலினி போல பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தவிர, உதயநிதியின் ‘நாடக’ அரசியலை எச்சரித்ததோடு, 2026ல் ‘நாடக அரசியல்’ எடுபடாது’’ என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் ஆவேசமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ ‘தமிழகம் யாருடன் போராடும்?’ என்ற ஆளுநரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல திராணி இல்லாமல் ‘பாசிச பாஜக’ என்று திசை திருப்பக் கூடாது.
தமிழக மக்களை, மக்கள் விரோத திமுக ஆட்சியை எதற்கும் எதிர்கட்சிகளை அடிமைகள் என்று கூறும் மன்னராட்சி நாயகன், இளவரசர் உதயநிதி ஸ்டாலின், பாசிச கொடுங்கோலர்கள் ஹிட்லர், முசோலினி போல பேசுவதை நிறுத்த வேண்டும். ஜனநாயக நாட்டில் யாரும், யாருக்கும் அடிமை இல்லை என்பதை துணை முதல்வர் உதயநிதி உணர்ந்து கொள்ள வேண்டும். திமுக கட்சியும் திமுக அரசும் தங்களுடைய அராஜக ஆட்சியில் மக்களை அடிமைகளாக நினைக்கும் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும்.
தமிழக மக்களை அடிமைகளாக நடத்தி வரும் மக்கள் விரோத, திராவிட மாடல் ஆட்சியை, ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத முதல்வராக ஆட்சி நடத்தி வரும் வாரிசு அரசியல் தலைவர் ஸ்டாலின் அரசின், மன்னர் ஆட்சியின் அநியாயங்களை, கொடுமைகளை கண்டித்து, திமுகவிற்கு வாக்களித்த மக்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, புரிந்து, எதிர்த்து குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர்.
திமுகவை ஆட்சி கட்டிலில் இருந்து அகற்ற வேண்டும். திமுக இல்லாத தமிழகத்தை உருவாக்கி தமிழகத்தை தலை நிமிரச் செய்ய வேண்டும் என்கிற லட்சியத்துடன் தமிழக மக்கள் திரண்டு வருவதை ஆணவத்துடன் அடக்க நினைக்கும் “சக்கரவர்த்தி திருமகன் இளவரசர் உதயநிதி ஸ்டாலின்” நேற்றைய கூட்டத்தில், “எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது” இன்று இறுமாப்புடன், திமிரான செருக்குடன், நிறைவேற்ற முடியாத தேர்தல் அறிக்கையை தந்து வீடு வீடாக வாக்கு பிச்சை கேட்டதை மறந்து, ஒட்டுமொத்த தமிழக மக்களையும், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களையும் அடிமைகள் என்று அவமானப்படுத்தி பேசியது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் இடம்பெற வேண்டும் என்ற தமிழக மக்களின் எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தேர்தலில் பரப்பரைக் கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் கொடிகளுடன் பரவலாக கலந்து கொண்டது, திமுகவினருக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி தூக்கத்தை கெடுத்துள்ளது.
திமுக ஆட்சி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும் என்ற எண்ணமும் வீழ்த்தப்பட்டுவிடும் என்கிற நம்பிக்கையும் தமிழக மக்களுக்கு உருவாகிவிட்டதை, திசை திருப்பும் வகையில், திமுக வளரும் காங்கிரஸ் கட்சியினரும் ஒன்றிணைந்து, காங்கிரஸ் & – தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்கப் போவதாக கற்பனை செய்திகளை பரப்பி, அந்த தேர்தல் அரசியல் நாடகத்தின் விளம்பர நாயகனாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நடிக்க வைத்து, “என்றைக்கும் கை நம்மைவிட்டு போகாது”, நான் என்னுடைய கைகளை சொன்னேன் என்று “மொக்கை” வசனம் பேசி தன்னை தானே ஆறுதல் படுத்தி கொண்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
கரூரில் 41 பேர் இறந்த துயர சம்பவத்தில், வெளிநாட்டில் இருந்து மின்னல் போல் வந்து, பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு விளம்பர மாடல் அரசியல்வாதியாக போஸ் கொடுத்து பேசிவிட்டு, மின்னல் போல் வெளிநாட்டுக்கு மறைந்து, தமிழக மக்களின் நலனை காற்றில் பறக்கவிட்ட “உலகச் சுற்றுலா நாயகன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்” தமிழக மக்களை காப்பது போல நீலி கண்ணீர் வடிப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக, மூன்றாவது முறையாக சரித்திர வெற்றி பெற்று மக்கள் நல ஆட்சி நடத்தி வரும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மத்திய பாஜக ஆட்சியை, இந்தியாவின் 19 மாநிலங்களில் ஆட்சி நடத்தி வரும் பாஜக கட்சியை “பாசிச பாஜக” என்று கூற உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதியில்லை. பாசிசத்தின் இலக்கணம் திமுக என்பதை கடந்த கால வரலாறு சொல்லும். தமிழக மக்களும் நன்கு அறிவர்.
அதேபோல், திமுகவின் “தமிழ்நாடு போராடும்” என்ற கற்பனையான போராட்ட முன்னெடுப்பை விமர்சித்து, “தமிழ்நாடு யாருடன் தான் போராடும்” என்று திமுகவை பார்த்து ஆளுநர் ரவி கேட்ட கேள்விக்கு , நேரடியாக பதில் சொல்ல திராணி இல்லாமல் கடந்த நான்கு வருடங்களாகத் தமிழ்நாடு உங்களுடன் தான் போராடிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்நாடு உங்களுடன் போராடும் உங்களை வென்று காட்டும் என மழுப்பலாக நாடக அரசியல் பதிலை பேசி நடித்துக் காட்டி சென்று இருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழகத்தில் தொடரும் விலைவாசி உயர்வு, மின் கட்டண சொத்து வரி உயர்வு, அனைத்து துறைகளிலும் ஊழல், அரசியல் படுகொலைகள், லாக்கப் படுகொலைகள், கஞ்சா நகரங்களாக மாறும் தமிழகத்தின் மாவட்ட தலைநகரங்கள், கள்ளச்சா சாவுகள், தேர்தல் பிரச்சார சாவுகள், போதை கலாச்சாரம், பாலியல் வன்கொடுமை குற்றங்கள் என சிதைந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டை மீட்க, தமிழ்நாடு போராட வேண்டும் தமிழக மக்கள் போராட வேண்டும் என ஒன்றிணைந்து திமுக ஆட்சியை வீழ்த்த தமிழக மக்கள் களத்தில் இறங்கி உள்ளனர். இதை திசை திருப்ப திமுகவின் “தமிழகம் போராடும்” என்ற பொய்யான போராட்ட அறிவிப்பை வெளியிட்டதை கண்டித்து ஆளுநர் ரவி, “தமிழகம் யாருடன் போராடும்?” என்று திமுகவை நேர்மையுடன் நேரடியாக விமர்சித்ததற்கு உதயநிதி ஸ்டாலின் நேரடியாக பதில் சொல்ல வேண்டும்.
ஆளுநர் ரவிக்கு பதில் சொல்ல முடியாத உதயநிதி ஸ்டாலின், பாசிச திமுக ஆட்சியின் கோர முகத்தை மறைக்க, தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக, பாசிச பாஜக என்றும் பாஜக மீதும், ஆளுநர் ரவி மீதும் செய்யும் அவதூறு பிரச்சாரங்கள் அனைத்தும் “பூமராங்” போல உதயநிதி ஸ்டாலினையும் திமுகவையும் அடியோடு வீழ்த்தும். இனி ஒரு முறை பாசிச பாஜக என்று திராவிட மாடல் மிச்சங்கள் உச்சரித்தால் மிகக் கடுமையான விளைவுகளை திமுக சந்திக்க நேரிடும். தமிழக மக்கள் திமுகவை விரட்டி அடிக்க உறுதி பூண்டுள்ளதை அறிந்து,புரிந்து தேர்தல் வரை நல்லாட்சி நடத்தி வாக்களித்த மக்களுக்கு நன்றியோடு செயல்படுங்கள்’’ என ஆவேசமாக கூறியிருக்கிறார்.
