தி.மு.க. அமைச்சர்கள் மீது பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிருப்தி அதிகரித்து வருவதுதான் அறிவாலயத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காத அமைச்சர் முத்துசாமி ஓட்டுகேட்டு வராதீர்கள் என்று ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட நந்தவனத்தோட்டம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 8-ஆவது வார்டில் நந்தவனத்தோட்டம் என்ற பகுதி உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதியில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் மாவட்ட அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பிளக்ஸில், 40 ஆண்டுகளாக நந்தவனத்தோட்டம் பகுதியில் சாலை, சாக்கடை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. வாக்கு கேட்டு வந்தபோது, அடிப்படை வசதிகள் செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். வெற்றி பெற்ற பிறகு நன்றி சொல்வதற்கு கூட இப்பகுதிக்கு வரவில்லை. ஆகவே, மீண்டும் ஒருமுறை எங்கள் பகுதிக்கு பொய்யான வாக்குறுதிகளை சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்டு வராதீர்கள் என அச்சிடப்பட்டிருந்தது.
ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் குறித்து நடுநிலையான உடன் பிறப்புக்கள் சிலரிடம் பேசினோம். எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார், அமைச்சர் முத்துசாமி செயல்பாடுகள் மக்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. தவிர, சொந்தக் கட்சி நிர்வாகிகளே அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். காரணம், யாருடைய குறைகளையும் அவர் காதுகொடுத்தே கேட்பதில்லை. அ.தி.மு.க.வில் இருந்து வந்ததால், அ.தி.மு.க.வில் உள்ள சிலருக்கு மட்டும் வேலைகளை செய்துகொடுக்கிறார்.
குறிப்பாக சத்துணவு அமைப்பாளர், சமையலர், சத்துணவு உதவியாளர் போன்ற பணிகளை தி.மு.க.வினருக்கு செய்துகொடுக்காமல், பழைய பாசத்தில் அ.தி.மு.க.வினருக்கு செய்துகொடுத்ததால் தி.மு.க. நிர்வாகிகள் அமைச்சர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஈரோடு எம்.பி. வேட்பாளராக பிரகாஷை தலைமை முடிவு செய்தது. அப்போது பிரகாஷுக்கு எதிராக காய் நகர்த்தியவர்தான் முத்துசாமி. ஆனால், இப்போது, எம்.பி.யுடன் கைகோர்த்துக் கொண்டு ‘கமிஷனில் விளையாடி’ வருகிறார்.
தொகுதியில் இவரது மோசமான செயல்பாடுகளுக்கு பல உதாரணங்கள் இருக்கும் நிலையில், தற்போது ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பஞ்சாயத்து அலுவலக கட்டடத்தை, அமைச்சர் திறந்து வைக்க தேதி அறிவித்த நிலையில், பவானி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., பூட்டை உடைத்து திறந்து வைத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி யூனியன் ஒரிச்சேரி பஞ்சாயத்துக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அலுவலக கட்டடம் கடந்த ஏப்ரல் 4ல் கட்டி முடிக்கப்பட்டது. பயன்பாட்டுக்கு திறக்காமல் பூட்டி கிடந்த நிலையில், கடந்த மாதம் 26ம் தேதி அமைச்சர் முத்துசாமி திறந்து வைப்பதாக இருந்தது. இந்நிலையில் பவானி, அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,கருப்பணன், கட்டட பூட்டை உடைத்து திறந்து வைத்துள்ளார். இச்சம்பவம் உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க.,வினர், ‘‘ பஞ்சாயத்து அலுவலக கட்டடத்தை வரும், (அக்டோபர்)26ம் தேதி அமைச்சர் திறந்து வைப்பார் என்று முறையாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பவானி எம்.எல்.ஏ.,கருப்பணன், பவானி பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தியை மிரட்டி, அவசர அவசரமாக திறந்து வைத்துள்ளார்’’ இவ்வாறு கூறினர்.
இதுகுறித்து எம்.எல்.ஏ., கே.சி.கருப்பண்ணன், ‘‘கட்டடம் கட்டி முடித்து நான்கு மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு திறக்கவில்லை. கட்டடத்தை திறந்து வையுங்கள் என எங்கள் கட்சியினரும் கூறினர். அதன் பின்னரே கட்சியினர், கான்ட்ராக்டருடன் திறந்து வைத்தோம். கலெக்டர், அமைச்சர் வந்து திறந்து வைப்பார்கள் என்று எனக்கு எந்த தகவலும் இல்லை’’ என்றார்.
இதுகுறித்து பி.டி.ஓ., கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, ‘‘ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் யாருக்கும் எந்த தகவலும் சொல்லாமல் எம்.எல்.ஏ., கட்டடத்தை திறந்து வைத்து விட்டார். அவர் திறந்த பிறகே எங்களுக்கு தகவல் வந்தது. கட்டடத்தின் பூட்டை உடைத்து திறந்து வைத்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். கட்டடத்துக்கான சாவி பஞ்., கிளார்க்கிடம் உள்ளது. தற்போது புதிய பூட்டை போட்டுவிட்டு, அந்த சாவியை அவர்கள் தான் வைத்துள்ளார்கள். இதுசம்பந்தமாக நடவடிக்கை வேண்டி, மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன்’’ என்றார்.
இப்போது புரிகிறதா..? அமைச்சர் முத்துசாமிக்கு ஈரோடு மாவட்டத்தில் எந்தளவிற்கு மரியாதை இருக்கிறது என்று! அமைச்சர் இருக்கும் மாவட்டத்தில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. பூட்டை உடைத்து அலுவலகத்தை திறக்கும் அவலநிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அமைச்சர் முத்துசாமியின் செயல்பாடுகள் பொதுமக்களைத் தாண்டி கட்சியினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது’’ என்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவாரா..?
கரூர் சம்பவம்… கண்டுகொள்ளாத அமைச்சர்..!
கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த த.வெ.க. மாநாட்டில் குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. 150 கி.மீ. தொலைவில் இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 3 மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து இரங்கலைத் தெரிவித்தார். ஆனால், சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஈரோட்டில் இருக்கும் அமைச்சர் முத்துசாமி கரூருக்கு இதுநாள் வரை செல்லவே இல்லை. துக்கமும் விசாரிக்கவில்லை.
காரணம், செந்தில் பாலாஜிக்கு தலைமை முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பவில்லையாம் அமைச்சர் முத்துசாமி. ‘எனக்கு ஜூனியரான செந்தில் பாலாஜியை என்னால் ஒருநாளும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறிவருகிறாராம் அமைச்சர் முத்துசாமி. இதனால்தான், இதுநாள் வரை கரூருக்கு அமைச்சர் முத்துசாமி செல்லவில்லை என்றனர். தவிர, கரூரில் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த முப்பெரும் விழாவையும் பெரிதாக கண்டுகொள்ளாமலும், ஆட்களை பெரிய அளவில் கூட்டத்திற்கு அனுப்பாமலும் புறக்கணித்தாராம் அமைச்சர் முத்துசாமி!
