சென்னையில் பிரபல நடிகர் வீட்டில் இன்று அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வருவது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் மம்மூட்டியின் மகன் தான் துல்கர் சல்மான். தமிழில் ஓ காதல் கண்மணி, லக்கி பாஸ்கர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநராக இருப்பவர் பிரித்விராஜ். இவரும் தமிழில் மொழி, நினைத்தாலே இனிக்கும் உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான் அண்மையில் பூடானில் இருந்து சொகுசு கார் இறக்குமதி செய்த விவகாரத்தில் சிக்கினார். இந்தியாவின் அண்டை நாடான பூடான் நாட்டின் வழியாக நம் நாட்டுக்கு உயர்நிலைக் கார்களை கொண்டு வந்து, மத்திய அரசுக்கு வரி செலுத்தாமல் ஒரு கும்பல் மோசடி செய்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பூடானுக்கு கார்களை இறக்குமதி செய்யும் நபர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு அந்த கார்களை ஒரு கும்பல் வாங்கி, இமாச்சல பிரதேசத்துக்கு கொண்டு வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. வரி ஏய்ப்பு செய்யப்பட்ட இந்த கார்களை வாங்கிய விவகாரத்தில் துல்கர் சல்மான் சிக்கினார். அவருடன் பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜும் சிக்கினார்.

இருவரது வீடுகளிலும் கடந்த செப்டம்பர் மாதத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கொச்சியின் திவாரா பகுதியில் உள்ள பிரித்விராஜின் சொகுசு வீடு மற்றும் கொச்சியின் பனம்பள்ளி பகுதியில் உள்ள துல்கர் சல்மானின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில்தான், இன்று காலையிலேயே சென்னை அபிராமிபுரத்தில் நடிகர் துல்கர் சல்மானின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வீட்டிற்கு இன்று காலை 2 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள நடிகர் மம்மூட்டிக்கு சொந்தமான இல்லத்தில் உள்ள அவரது திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் இந்த சோதனை நடந்து வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal