தமிழக வெற்றிக் கழகத்தை தவறாக வழிநடத்துவதாக ஆதவ் அர்ஜுனா மீது விமர்சனத்தை வைத்துள்ளனர் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.

தவெக நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்டதாக எழுந்த புகாரில் பேரில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி நடந்த தவெக தலைவர் விஜயின் பிரச்சாரக் கூட்டத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே ஆடிப்போக வைத்துள்ளளது இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல்குமார் மற்றும் பலர் மீது கரூர் டவுன் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சூழலில தவெக துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா நேற்று நள்ளிரவில் வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்தப் பதிவில், “இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், ‘ஜென்ஸ்’ தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!” என்று கூறியிருந்தார்.

அந்த பதவினை உடனே அவர் டெலிட் செய்துவிட்டார். எனினும் அதனை ஸ்கிரீட் ஷாட் எடுத்து வைத்திருந்த திமுகவினர், ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா மீது ஐந்து பிரிவின்கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அதன்படி, பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டப்பிரிவு 192, கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆத்திரமூட்டல், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரவு 196 (1) வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை வளரக்கும் அல்லது நல்லிணக்கத்தை பாதிக்கும் செயல்கள், பிஎன்எஸ் சட்டப்பிரிவு 197 (1) (டி) இந்திய இறையாண்மை ஒற்றுமை அல்லது பாதுகாப்புக்கு தீங்கு விளைவித்தல், 353 (1) (பி) பொதுமக்களுக்கு தீங்கு விளைக்கும் அறிக்கைகள், தவறான தகவல்கள், வதந்தி வெளியிடுவது, 353 (2) பொது தீமைக்கு வழிவகுக்கும்.. உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு அல்லது பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் தகவலை உருவாக்குதல் அல்லது வெளியிடுதல் போன்ற குற்றங்களுக்கு தண்டனை அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இந்த பிரிவில் தான் ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வாரண்ட் இல்லாமல் காவல் துறையினர் கைது செய்ய முடியும். ஜாமீன் பெற முடியாது. நீதிமன்றத்தில் முறையிட்டுத்தான் தீர்வு பெற முடியும். எனவே ஆதவ் அர்ஜுனா எந்தநேரமும் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், ஏற்கனவே ஆதவ் அர்ஜுனா வி.சி.க.வில் இருந்தார். அவர் இருக்கும் வரை அக்கட்சியில் குழப்பம் நீடித்தது. இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஆதவ் அர்ஜுனா மீது ‘கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டை வைத்தார்கள். அதன்பிறகு யோசித்தத தொல் திருமாவளவன் அவரை கட்சியைவிட்டு நீக்கினார். ஆதவ் அர்ஜுனாவை நீக்கிய பிறகு வி.சி.க.வில் எந்தப் பிரச்னையும் எழாமல் இருக்கிறது.

தி.மு.க. மீது தனக்குள்ள சொந்தக் காழ்ப்புணர்ச்சியால், ஆதவ் அர்ஜுனா இருக்கும் கட்சியை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். அதனால்தான் இவ்வளவு குழப்பமும் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கிறது. கரூரில் கூட்டம் அதிகமாக கூடியதால், பிரச்சாரம் நடத்தும் இடத்திற்கு முன்கூட்டியே விஜய்யை பேசும்படி காவல்துறை அதிகாரி கூறியிருக்கிறார். அதற்கு ‘முடியாது… பிரச்சார இடத்தில்தான் விஜய் பேசுவார்’ என ஆதவ் அர்ஜுனா கூறியதாக தகவல்கள் வெளியானது.

விஜய் பிரச்சார இடத்திற்கு சென்றதால், அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசல் ஏற்பட்டு இன்றைக்கு குழந்தைகள் உள்பட 41 உயிர்கள் பலியாகியிருக்கிறது. விஜய் பிரச்சார இடத்திற்கு முன் உள்ள இடத்தில் பேசியிருந்தால், நெரிசலும் ஏற்பட்டிருக்காது, உயிர்பலியும் நடந்திருக்காது. இந்த நிலையில்தான் த.வெ.க. இளைஞர்களை உசுப்பேற்றும் விதமாக பதிவு போட்டு நீக்கியிருக்கிறார்.

பொதுவாழ்க்கையில் இப்படி அரைவேக்கட்டுத்தனமாக செயல்பாடுகளில் இறங்கினால் நிலைமை மோசமாகும் என்பதை ஆதவ் அர்ஜுனாவிற்கு கரூர் சம்பவம் உணர்த்தியிருக்கிறது. இனியாவது அவர் திருந்தவேண்டும்’’ என்றவர்கள், ‘‘த.வெ.க.வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இல்லாத நிலையில், விஜய்யை தவறாக வழிநடத்துகிறாரோ ஆதவ் அர்ஜுனா என்ற கேள்வியும் எழுகிறது’’ என்றனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal