கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சாரக்கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல விஜய் வெளியிட்ட வீடியோதான் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. இவ்வளவு பெரிய சம்பவம் நடந்தும் விஜய் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
‘‘என் வாழ்க்கையில் இது போன்ற சூழ்நிலையை சந்தித்ததில்லை’’ என கரூர் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து விஜய் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: ‘‘என் வாழ்க்கையில் இது போன்ற சூழலை சந்தித்ததில்லை. மனது முழுக்க வலி இருக்கிறது. ஏற்கெனவே 5 மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும். கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல் இருக்கிறது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும்.
சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழி வாங்கும் எண்ணம் இருந்தாலோ என் மீது கை வையுங்கள். ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்’’ என விஜய் பேசியிருக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசிய வீடியோவில், ‘எந்தவொரு கட்சித் தலைவரும் தனது தொண்டன் உயிரிழப்பதை விரும்பமாட்டார்’ என்ற தொணியில் பேசியிருந்தார். ஆனால், கரூர் சம்பவத்திற்கு முதல்வர்தான் காரணம் என நேரடியாக குற்றஞ்சாட்டியிருப்பதுபோல் விஜய்யின் வீடியோ இருக்கிறது என பத்திரிகையாளர்களே விவாதத்தைக் கிளப்பியிருக்கிறார்கள்!
