தவெக துணைப்பொதுச் செயலாளர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பதிவில், ‘‘சாலையில் நடந்து சென்றாலே தடியடி… சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது…. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ஆதவ் அர்ஜுனா அவரது எக்ஸ் பதிவை நீக்கி உள்ளார்.
ஆதவ் அர்ஜுனாவின் இந்தப் பதிவு வன்முறையை தூண்டும் வகையிலான கருத்து என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்ச்சைகள் வலுத்த நிலையில் தான் அந்தப் பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கியிருக்கிறார். அதேநேரம் அவர் பதிவு குறித்த ஸ்கிரீன்ஷாட் வைரலாகி வருகிறது.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா புரட்சி வெடிக்கட்டும் என்று பதிவிட்டது உச்சக்கட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். கட்சித் தலைவர், நிர்வாகிகள் என ஒருவர் கூட இன்னமும் கரூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
திமுக எம்பி கனிமொழி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘‘கட்சித் தலைவர், நிர்வாகிகள் என ஒருவர் கூட இன்னமும் கரூர் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சம்பவம் நடந்த நாள் அன்று மக்களை சந்தித்து ஒரு ஆறுதல் கூட சொல்லாமல் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். ஆனால் தமிழக அரசும், திமுக நிர்வாகிகளும் தான் சம்பவம் நடந்ததில் இருந்து இப்போது வரை மக்களுக்கு ஆறுதலாக நிற்கிறார்கள். இது குறை சொல்லும் நேரம் கிடையாது. முதல்வர் ஸ்டாலின் கூட இப்போதும் மக்களுக்கு துணையாக தான் பேசி வருகிறார்.
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பதிவு உச்சக்கட்ட பொறுப்பின்மை. புரட்சி வெடிக்கட்டும் என்று அவர் பதிவிட்டது உச்சக்கட்ட பொறுப்பின்மையை காட்டுகிறது. அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக வன்முறையை தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல.. சமூக வலைத்தளங்களில் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்’’ இவ்வாறு அவர் கூறினார்.
