விஜய் தனது காரில் பாதுகாப்பு குழுவினருடன் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்த அன்று இரவு தனது வீட்டிற்குள் சென்ற விஜய், சுமார் 34 மணி நேரத்திற்கு பிறகு இன்று வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அவர், தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினம்பாக்கம் வீட்டிற்கு சென்றுள்ளார் என தகவல்வெளியாகியுள்ளது.

நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினம்பாக்கம் வீட்டிற்குச் சென்ற விஜய்க்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முதலில், அவர் எதற்காக வெளியே சென்றார் என்ற தகவல் தெரியவில்லை. ஒரு பக்கம், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க விஜய் கரூர் செல்லலாம் எனக் கூறப்படுகிறது.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூற விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் முடிவு எடுத்திருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில், கரூர் செல்ல பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆதவ் அர்ஜூனா மனுத்தாக்கல் செய்துள்ளார்.

பாதுகாப்பு உறுதியான உடனே விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கரூரில் நிகழ்ந்த கூட்டநெரிசலைத் தொடர்ந்து அன்றிரவே சென்னை திரும்பிய விஜய், தற்போது திருச்சி விமானம் நிலையத்திற்கு தனி விமானத்தில் புறப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இதற்கிடையே இன்று மதியம் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் த.வெ.க. தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு மதியம் விசாரணைக்கு வர இருப்பதால், அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க விஜய் ஆயத்தமாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal