கரூரில் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தவெக மாவட்டச் செயலாளர் மதியழகன் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ எனும் பெயரில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் மட்டும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். அதன்படி ஒவ்வொரு சனிக்கிழமையும் தமிழ்நாட்டின் இரண்டு மாநிலங்களை தேர்ந்தெடுத்து பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார்.

அந்தவகையில், 27ஆம் தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டத்தில் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டார். வழக்கம்போல், இரண்டு மாவட்டங்களுக்கும் விஜய் தாமதமாக வர இரண்டு இடங்களிலும் கூட்ட நெரிசல் அதிகரித்தது. குறிப்பாக இரண்டாவது மாவட்டமான கரூரில் நேரம் கூட கூட மக்கள் கூட்டமும் அதிகரித்தது.

இதன் காரணமாக அங்கு பெரும் நெரிசல் ஏற்பட்டு, மூச்சு விடுதில் சிரமம், தள்ளுமுள்ளு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. இதில் பலரும் அடுத்தடுத்து மயங்கிவிழ அவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில், 9 குழந்தைகள், 18 பெண்கள், 14 ஆண்கள் என மொத்தம் 41 பேர் வரை பரிதாபமாக பாலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து நேற்று மாலை தனது விசாரணை துவங்கியுள்ள முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கரூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கும் ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.

இந்நிலையில், தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.காவல்துறை விதித்த நிபந்தனைகளை மீறி கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்புக்கு காரணமானதாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன், பொதுச் செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரச்சார நிகழ்ச்சி நிறைவடைந்த உடன் மேற்கு மாவட்ட செயலர் மதியழகன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal