இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஒரு அரசியல் பொதுக்கூட்டத்தில் 39 பேர் (குழந்தைகள் உள்பட) இறந்திருப்பது இதுவே முதன்முறை! தமிழக அரசியல் வரலாற்றில் 27ம் தேதி கரூரில் கரும்புள்ளி ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.

கரூரில் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் குழந்கைள், பெண்கள், பெரியவர்கள் உள்பட 39 பேர் இறந்திருக்கிறார்கள். 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் வந்து உயிர்காக்கும் பணிகளை பார்வையிட்டதோடு, உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லி, நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இந்த பொதுக்கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகவும் எங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தகவல் வந்துள்ளது.

தவெக கூட்டம் நடைபெறுகின்ற போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதே கட்சி இதற்கு முன்னால் 4 பொதுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதையெல்லாம் ஆய்வு செய்து முழுமையாக பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தொலைகாட்சியை பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த கட்சி மட்டுமல்ல, அதிமுக சார்பில் நான் நடத்தும் பயணத்தில் காவல்துறை எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு தரவில்லை.

இந்த அரசாங்கம் ஒருதலைபட்சமாக நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பார்க்காமல் நடுநிலையோடு நடக்கவேண்டும். அதிமுக ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கு, பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கூட்டம் நடத்துவதே சிரமம். நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கிறது. முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். அதே போல ஒரு அரசியல் கட்சி தலைவரும் அதை கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். அவர் சுற்றுப் பயணம் செல்லும் மாவட்டங்களில் என்னென்ன குறைபாடு இருக்கிறது என்று அவரும் ஆலோசனை செய்து முன்னேற்பாடுகளை நடத்தியிருக்க வேண்டும்.

ஒரு பொதுக்கூட்டம் என்றால் ஒரு அரசியல் கட்சியை, அரசாங்கத்தை, காவல்துறையை நம்பித்தான் பொதுமக்கள் வருகிறார்கள். ஒரு நேரத்தை அறிவித்துவிட்டு பலமணி நேரம் கழித்து வரும்போது அதில் சில பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். இதில் நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே இதுவரை ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. இது மிகுந்த வேதனையை தருகிறது. முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்றதை பொறுத்தவரை அரசாங்கத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டியதைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதைத்தான் செய்யும். இது அரசாங்கத்தின் கடமை. அதைத்தான் இந்த அரசும் செய்திருக்கிறது” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

கரூரில் நடந்த சம்பவத்திற்கு காரணம் யார்? என்று பார்ப்போம்… ‘வாக்களித்தவர்களைத் தவிர்த்து, வாக்களிக்காதவர்களும் ஏன் வாக்களிக்கவில்லை என்று ஏங்கும் அளவிற்கு அரசின் திட்டங்கள் இருக்கும் என்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஆனால், ஆளுங்கட்சி நடத்தும் கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான போலீசாரும், எதிர்க்கட்சியினர் நடத்தும் போராட்டங்களுக்கு குறைவான போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் எழுப்புகின்றன. எனவே, முதல்காரணம், பாதுகாப்பு குறைபாடு என்றுதான் சொல்லவேண்டும்.

இரண்டாவது காரணம், கரூர் வருவதற்கு முன்பு விஜய் 5 இடங்களில் பிரச்சாரக்கூட்டத்தை முடித்திருக்கிறார். பிரச்சாரக் கூட்டங்கள் முடிந்த பிறகு அந்த இடம் போர்க்களம் போல் காட்சியளிக்கிறது. எந்தவொரு அரசியல் கட்சிகளும் இப்படி நடந்து கொள்வதில்லை. இப்படி நடந்ததில்லை. ஆனால், விஜய்யின் தொண்டர்கள் (ரசிகர்கள்) தான்தோன்றித் தனமாக இருக்கிறார்கள். இவர்களை விஜய்யாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. த.வெ.க.வில் இரண்டாம் கட்டத் தலைவர்கள், மூன்றாம் கட்டத் தலைவர்கள் என கட்டமைப்பு இல்லை. இதனால்தான் இப்படியொரு அசம்பாவிதம்.

மூன்றாவது காரணம், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் வரவேண்டாம் என்று சொன்னார் விஜய். ஆனால், கடந்த 5 இடங்களிலும் இவர்கள் வந்தார்கள். அப்போது மைக்கில் விஜய் வரவேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் சொல்லவில்லை. அது இருக்கட்டும் பொதுமக்களுக்கு அறிவு எங்கோ போகிறது. தான்தோன்றித் தனமாக நடக்கும் கூட்டத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்லலாமா? இச்சம்பவதிற்கு மக்களும் ஒரு காரணம்தான்!

39 பேர் உயிரிழப்பிற்குப் பிறகாவது மக்கள் சினிமா மாயையிலிருந்து விடுபடுவார்களா?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal