நாமக்கல் மாவட்டத்தில் ராமலிங்கம் பிள்ளையை நினைவு கூர்ந்த விஜய், ‘தி.மு.க. பா.ஜ.க.வுடன் அண்டர் டீலீங் வைத்துள்ளனர். அதே சமயம், அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி’ என கடுமையாக விமர்சித்தார்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் முதற்கட்டமாகவும், நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாகவும் சுற்றுப்பயணம் செய்தார்.

இந்நிலையில், மூன்றாவது கட்ட சுற்றுப் பயணமாக நாமக்கல் மாவட்டத்திற்கு வந்துள்ளார். நேற்று இரவு முதலே விஜயைப் பார்ப்பதற்காக தொண்டர்கள் குவிந்துள்ளனர். அதிகாலை முதலே நாமக்கல் மாவட்டத்தில் தவெக தொண்டர்களும், விஜய்யின் ரசிகர்கள் வரத் தொடங்கினர். கொளுத்தும் வெயிலிலும் வழக்கம்போல் விஜய்யை பார்ப்பதற்காக இளைஞர்களும், பெண்களும் அதிகளவில் திரண்டுள்ளனர்.

நாமக்கல் கே.எஸ் திரையரங்கம் பகுதியில் கூடியிருந்த மக்களிடம் தவெக தலைவர் விஜய் பேசும்போது, ‘‘புதுசா எதுவும் சொல்லவில்லை என்கிறார்கள். புதுசா அப்படி என்ன சொல்றது. எங்களுக்கு திமுக மாதிரி பொய் வாக்குறுதி கொடுக்க மாட்டோம். செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி திறப்போம், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை, வீட்டிற்குள் ஏரோபிளேன் விடுவோம் என்று முதலமைச்சர் சார் மாதிரி அடித்துவிடலாமா. நாங்கள் சாத்தியமானதை, செய்யக்கூடியதை மட்டுமே செய்வோம்.

திமுக மாதிரி பாஜகவுடன் திரைமறைவு கூட்டணி எல்லாம் வைக்க மாட்டோம். அதிமுக &- பாஜக நேரடியாக கூட்டணியில் உள்ளனர். திமுக குடும்பம் பாஜக உறவுடன் அண்டர்டீலிங் வைத்துள்ளனர். கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி பாஜகவுடன் எப்போதும் கூட்டு இல்லை. திமுகவுக்கு ஓட்டு போட்டால் பாஜகவுக்கு ஓட்ட போட்ட மாதிரி தான். வெளியில் அடித்துக் கொள்வார்கள். இருவரும் ஒன்று தான். யோசியுங்கள் மக்களே.

அம்மா அம்மா என்று சொல்லிக்கொண்டு ஜெயலலிதா மேடம் என்று சொல்லிய எதையும் பின்பற்றாமல், அதிமுக & பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது சந்தர்ப்பவாத கூட்டணி என்று மக்களே நேரடியாக கூறுகிறார்கள். வருகிற தேர்தலில் தவெக, திமுக இடையே தான் போட்டி. நண்பா.. நண்பி.. தோழா.. தோழி என் மீது நீங்கள் இவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார்களா. பார்த்துடலாம். ஒரு கை பார்த்தடலாம். நானும் என்னமோ ஏதோ என்று நினைத்தேன். பார்த்துவிடலாம். நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்’’என்றார்.

தவிர, நாமக்கல் மாவட்டத்திற்கு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. வாக்குறுதி அளித்துவிட்டு, நிறைவேற்றாததையும் படித்துக் காட்டினார் விஜய்! தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான மருத்துவமனையில் நடந்த கிட்னி திருட்டில் பாதிக்கப்பட்டதும் நாமக்கல் மாவட்டம் என்பதை மீண்டும் நினைவு கூர்ந்தார் விஜய்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal