விஜய் பிரச்சாரத்திற்காகத் திருச்சியில் இருந்து நாமக்கலை நோக்கிப் புறப்பட்டபோது, அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகப் (பவுன்சர்கள்) பின்னால் வந்த தனி வாகனம் விபத்தில் சிக்கியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமது மூன்றாம் கட்டப் பிரச்சாரப் பயணத்தை இன்று (செப்டம்பர் 27-ம் தேதி) தொடங்கினார். நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள, சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்த நிலையில், அங்கு பாதுகாப்பு குறைபாடு, வாகன விபத்து என அடுத்தடுத்து இரு பரபரப்புச் சம்பவங்கள் நடந்துள்ளன.

விஜய் வந்திறங்கிய திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது, விமான நிலைய ஊழியர் போன்ற உடையில் ஒருவர் வேகமாகப் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்தார்.

அவரைப் பார்த்த பாதுகாப்புப் படை வீரர்கள் சந்தேகப்பட்டு, அவரைத் தடுத்துப் பிடித்து விசாரித்தனர். சோதனையில், அந்த நபர் கழுத்தில் ஒரு டேக் அணிந்திருந்தாலும், அதில் அடையாள அட்டை இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் சந்தேகம் வலுக்கவே, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

அதில், அவர் விமான நிலைய ஊழியர் இல்லை என்றும், தனது தலைவரான விஜய்யை மிக அருகில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில், ஊழியர் போல் வேடமணிந்து வந்த தீவிர ரசிகர் என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவரை துப்பாக்கி முனையில் பிடித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்து, அங்கிருந்து வெளியேற்றினர்.

விஜய் பிரச்சாரத்திற்காகத் திருச்சியில் இருந்து நாமக்கலை நோக்கிப் புறப்பட்டபோது, அவருக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகப் (பவுன்சர்கள்) பின்னால் வந்த தனி வாகனம் விபத்தில் சிக்கியது. திருச்சி -& முசிறி சாலையில் உள்ள திருஈங்கோய்மலை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது, பவுன்சர்கள் பயணித்த கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

விபத்தில் சிக்கிய கார் பயணிக்க ஏதுவாக இருந்ததால், பவுன்சர்கள் வாகனத்தை நிறுத்தாமல், தொடர்ந்து அதே வேகத்தில் நாமக்கலை நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர்.

பிரச்சார வாகனத்தைப் பின்தொடர வேண்டாம், பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்ய வேண்டாம் எனத் விஜய் தொடர்ந்து அறிவுறுத்தியும், தவெக-வினர் மற்றும் ரசிகர்கள் ஆர்வ மிகுதியால் சாலை விதிகளை மீறி இதுபோன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற ஆர்வக்கோளாறு காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal