தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரடியாக விமர்சித்து வரும் நிலையில், முதன் முறையாக விஜய்யை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
தவெக தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைதோறும் மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மலைக்கோட்டை நகரமான திருச்சி மற்றும் அரியலூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய விஜய், கடந்த வாரம் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் தான் செல்லும் இடங்களில் எல்லாம் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
கடந்த வாரம் கருணாநிதியின் கோட்டையான திருவாரூரில் திமுகவை பொளந்து கட்டிய விஜய், சொந்த மாவட்டத்தையே முதல்வர் ஸ்டாலின் கருவாடு போல் மாற்றி விட்டதாக குற்றம்சாட்டி இருந்தார். அதே வேளையில் விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என திமுக, நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இது மட்டுமின்றி ‘‘விஜய் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருகிறார். மற்ற நாட்களில் ஏன் வெளியே வருவதில்லை? இப்படி பார்ட் டைம் அரசியல் செய்தால் வேலைக்கு ஆகாது’’ என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டிகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்கு நாகையில் விளக்கம் அளித்த விஜய், ‘‘மக்களை சந்திக்கும் பயணத்திட்டம் போடும்போது அது என்ன சனிக்கிழமை பயணம் என்ற விமர்சனம் வந்தது.
உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் வார இறுதி நாளாக பார்த்து மக்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளோம. அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான் ஓய்வு நாளாக பார்த்து தேர்ந்தெடுத்தோம்’’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி, ‘சனிக்கிழமை மட்டும் வெளியே வருபவன் நான் அல்ல’ என்று கூறி விஜய்யை தாக்கியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி உயரிய ஊக்கத்தொகை வழங்கினார் துணை முதலமைச்சர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சர்வதேச, தேசிய போட்டிகளில் வென்ற 819 நபர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 4,518 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.150 கோடி உயரிய உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேடையில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், ” நம் விளையாட்டு வீரர் & வீராங்கனையருக்கு திராவிட மாடல் அரசின் ஊக்கமும் உற்சாகமும், ஒவ்வொரு ஆடுகளத்தையும் வெற்றிக்கான களமாக்கி வருகிறது.
அந்த வகையில், சர்வதேச மற்றும் தேசிய அளவில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டுக்கு பெருமைச் சேர்த்த 819 வீரர் வீராங்கனையருக்கு ரூ.21.40 கோடி ‘ ஹை கேஷ் இன்சன்டிவ்’ -இன்று வழங்கினோம்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘நான் பல மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் செல்கிறேன். வாரத்திற்கு 4, 5 நாட்கள் வெளியூரில்தான் இருப்பேன். நான் சனிக்கிழமைகளில் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரும் ஆள் இல்லை’’ என்று நடிகர் விஜயை குறிப்பிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் நேரடி போட்டி என விஜய் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், வரும் தேர்தலில் விஜய் மற்றும் உதயநிதி இடையே நேரடி போட்டியாக பார்க்கப்படுகிறது. திமுக ஆட்சியை விஜய் வறுத்தெடுத்து வரும் நிலையில், அவரின் பேச்சுக்கு உதயநிதி அந்த அளவுக்கு ரியாக்சன் காட்டியதில்லை. இந்த நிலையில், முதன் முறையாக விஜய்யை தாக்கி பேசியுள்ளார். உதயநிதியின் பேச்சை பார்த்து பொங்கிய தவெகவினர் அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
