முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளி ஒருவர் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது என தனது ஆதாரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம். விரைவில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய அரசியல் கட்சி ஒன்றிற்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது.
திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் உள்பட 11 மாவட்டங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கக்கூடியவர்கள் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். திருச்சி மாவட்ட அ.தி.மு.க.வைப் பொறுத்தளவில் எம்.ஜி.ஆர், ஜெ. மறைவிற்குப் பிறகு முத்தரையர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.
அ.தி.மு.க. தலைமையோ, ‘உங்களுக்குள் ஒற்றுமை இல்லை… உங்கள் மீது உங்க சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே வைக்கும் குற்றச்சாட்டுக்களைப் பாருங்கள்…’ எனச் சொல்லி தட்டிக்கழித்து வருகிறது. தி.மு.க.வைப் பொறுத்தளவில் பெயருக்கு ஒருவரை மாவட்டச் செயலாளராக நியமித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில்தான் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவுக்காரரர் ஒருவர் விரைவில் முக்கிய அரசியல் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும் நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறராம். இதுதொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகிறாராம். இவர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த கட்சியில் மாநிலப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது!