த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம், திருவாரூரில் பேசும் போது, ‘‘டெல்டா மாவட்டங்களில், அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் கொடுக்குறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபாய் கமிஷன் வாங்கறாங்க. இப்படி பல கோடி ரூபாய் கமிஷனா பிடுங்கப்படுது’’ என பேசினார்.
விஜய் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய திருவாரூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., பூண்டி கலைவாணன், ‘‘அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலித்தனர். இதில் முதல்வருக்கோ, தி.மு.க., அரசுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லை. ‘இந்தத் தொகையை விவசாயிகளிடம் இருந்து பெறுவது, சுமை தூக்கும் தொழிலாளர்கள் தான். விவசாயிகள் தான் விருப்பப்பட்டுக் கொடுக்கின்றனர்.விருப்பப்பட்டுக் கொடுத்தாலும், விவசாயிகளுக்கு பாதிப்பு இருப்பதால், அதை கட்டுப்படுத்தும் வழிகளை அரசு யோசித்து வருகிறது’’ என்று தெரிவித்தார்.
இது, சுமை தூக்கும் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:
‘‘மூட்டையை எடுத்து செல்லும் லாரி டிரைவர்களுக்கு மாமூல்; ஆய்வுக்கு வரும் அரசு அதிகாரிகளுக்கு மாமூல், நெல் எடையிழப்பு ஏற்படாமல் சமாளிக்க மாமூல் என, நெல்லை விற்க வரும் விவசாயிகளிடம் லஞ்சமாக வாங்குகின்றனர். நெல்லை கொள்முதல் செய்யும் பணியாளர்கள், நேரடியாக அந்த பணத்தை விவசாயிகளிடம் வாங்கினால், லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் சிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், சுமை தூக்கும் தொழிலாளர்களை, கருவியாக பயன்படுத்துகின்றனர்.
இந்த லஞ்சத்தை சுமை தூக்கும் தொழிலாளர்கள் வாயிலாக அலுவலர்கள் வாங்குவதால், விவசாயிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது எரிச்சல் அடைந்துள்ளனர். இந்த உண்மை புரியாமல், தி.மு.க., – எம்.எல்.ஏ.,வும், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல’’ இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருச்சி மாவட்ட விவசாயிகள் சிலரிடம் பேசினோம், ‘‘சார், திருச்சி புறநகர் பகுதிகளில் அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில் தி.மு.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை ஒன்றியச் செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கிறார்கள். அவர்கள்தான் இந்தத் தொகையை நேரடியாக வாங்குகிறார்கள்.
ஒன்றியச் செயலாளரின் பிறந்த நாளைக்கு போஸ்டர் அடிப்பது, பிரியானி, குவார்ட்டர் வாங்கிக் கொடுப்பது போன்ற வேலைகளை இந்த பணத்தை வைத்து செய்து ஒன்றியச் செயலாளர்களை குளிர்விக்கின்றனர். தவிர, இந்த நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பொறுப்பாளராக வேண்டும் என்பதில் அவர்களுக்குள்ளேயே போட்டியும் நிலவுகிறது. ஒன்றியச் செயலாளர் யாரைப் பார்த்து கண் அசைக்கிறாரோ அவருக்குத்தான் லஞ்சம் வாங்கும் வாய்ப்பு!
தவிர, திருச்சி புறநகரைப் பொறுத்தளவில் ‘மன்னரின்’ மகன் பெயரைச் சொல்லி ஒன்றியச் செயலாளர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. இதற்கெல்லாம் 2026ல் மக்கள் பாடம் புகட்டிவிடுவார்கள்’’ என்றனர் சோகத்துடன்!
விவசாயி என்பவன் ஊரை ஏமாற்றி, கலெக்ஷன், கமிஷன், கரப்ஷன் என்று பிழைப்பு நடத்துபவனல்ல… வியர்வை சிந்தி 6 மாதம் உழைத்துதான் நெல்லை அறுவடை செய்கிறான். அவன் வயிற்றில் அடித்துப் பிழைப்பவர்களை அந்த ஆண்டவனே பார்த்துக்கொள்வான்..!