‘வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் இடையேதான் போட்டி’ என மீண்டும் அழுத்திச் சொல்லியிருக்கிறார் விஜய். ‘2026ல் ஓருவருக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார். விஜய் யாருக்கு ஓய்வு கொடுக்கப்போகிறார் என்பது பற்றி பார்ப்போம்..!

விஜய்க்கு விதிக்கப்பட்ட 26 விதிகளை எல்லாம் தாண்டி நாகப்பட்டினத்தில் பேசிய விஜய், ‘‘ அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வணக்கம். நாகூர் ஆண்டவர் அன்புடன், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு, கடல்தாய் மடியில் இருக்கும், என் மனதுக்கு நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.
என்றைக்கும் மீனவ நண்பனான விஜய்யின் அன்பு வணக்கங்கள். மீன்பிடி தொழில், விவசாயம் என உழைக்கும் மக்கள் இருக்கும் ஊர் நாகப்பட்டினம். மத வேறுபாடு இல்லாத அனைவருக்கும் பிடித்துப்போன, மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் உங்கள் அனைவருக்கும் சிறப்பான வணக்கங்கள்.
இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதற்கான காரணத்தையும், தீர்வையும் மதுரை மாநாட்டில் பேசினேன். அதை விமர்சித்தார்கள். நான் இன்று நேற்றா மீனவர்களுக்காக குரல் கொடுக்கிறேன். இதே நாகையில் 2011-லேயே பிப்ரவரி 22 அன்று இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன். விஜய் களத்துக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. முன்பு விஜய் மக்கள் இயக்கமாக வந்து நின்றோம். இன்று தவெக என்ற கட்சியாக வந்து நிற்கிறோம். என்றும் மக்களோடு மக்களாக நான் நிற்பேன்.
மீனவர்களுக்கு குரல் கொடுக்கும் வேளையில் நம் தொப்புள் கொடி உறவுகளான இலங்கை தமிழர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்களுக்காகவும் நிற்பது நமது கடமை. மீனவர்கள் நலன் போல் ஈழத் தமிழர்கள் வாழ்க்கையும் முக்கியம். கடிதம் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் கபட நாடக திமுக அல்ல. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பேச நாம் பாசிச பாஜகவும் அல்ல,
நாகப்பட்டின மண் வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும். அலையாத்திக் காடுகளை பாதுகாக்க வேண்டும். குடும்ப வளர்ச்சி தான் முக்கியமான வேலையாக இருக்கும் கட்சி, மக்கள் தாகம் தீர்க்க காவிரி நீரைக் கொண்டு வந்தார்களா? இங்கே ஒரு அரசு கடல்சார் கல்வி பயிற்றும் கல்லூரி கொண்டு வந்திருக்கலாம். இங்கே கடல் உணவுகள் சம்பந்தமாக எந்த தொழிற்சாலையையும் அமைக்கவில்லை.
ஆனால் ஒவ்வொரு முறை வெளிநாட்டு டூர் போய்விட்டு வரும்போதெல்லாம் சிஎம் சிரித்துக் கொண்டே வெளிநாட்டு முதலீடு என்பார். ‘சிஎம் சார்’ வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா?. வேளாங்கண்ணி, கோடியக்கரை, வேதாரண்யம் போன்ற டூரிஸ்ட் இடங்களை முன்னேற்றலாம். நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவ டாக்டர் இல்லையாம். நாகப்பட்டினம் புது பஸ்ஸ்டாண்டை சுத்தமாக வைக்கலாம். இங்குள்ள ஸ்டீல் ரோலிங் மில்லை மூடிவிட்டார்கள். அதை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். மேலகோட்டை மேம்பாலம் கட்டி 50 வருடமாகிவிட்டது. அதை புதுப்பிக்கலாம்.
நான் கடந்த வாரம் சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் மக்களை சந்தித்தேன். பெரம்பலூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன். டூர் ப்ளான் போட்டபின்னர் சனிக்கிழமை மட்டுமே ஏன் மக்களை சந்திக்கிறீர்கள் என்கிறார்கள். உங்கள் அனைவரையும் பார்க்கும்போது எந்தவிதமான தொந்தரவும் இருந்துவிடக் கூடாது என்பதாலேயே வார இறுதியில் சந்திப்பது என்று திட்டமிட்டோம். அதேபோல் அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமல்லவா?. அதற்காகவும் தான் ஓய்வுநாளில் பிரச்சாரம் செய்கிறேன்.
எனது கூட்டங்களுக்கு அனுமதி மறுப்புக்கான காரணமெல்லாம் சொத்தையாக இருக்கிறது. நான் பேசுவதே 3 நிமிடங்கள் தான். அதற்கும் தடை. அதைப் பேசாதே, இதைப் பேசாதே என்று தடை. அப்போ, நான் எதைத்தான் பேசுவது. நான் பேசச் சென்றபோது அரியலூரில் பவர் கட். திருச்சி போய் பேச ஆரம்பித்தவுடன் ஸ்பீக்கருடன் இணைக்கப்பட்ட ஒயர் கட். சிஎம் சார், ஒரு பிரதமர், ஆர்எஸ்எஸ் தலைவர் வந்தா இந்த மாதிரி கண்டிஷன் போடுவீங்களா. பவர் கட், வயர் கட் பண்ணுவீங்களா?. செய்தால் பேஸ்மென்ட் அதிரும்ல. நீங்கள்தான் அவர்களுடன் மறைமுக உறவுக்காரர்களாச்சே.
சிஎம் சார் மிரட்டிப் பார்க்கறீங்களா? அதுக்கு விஜய் ஆளில்லை. என்ன செய்துவிடுவீர்கள். கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு குடும்பத்தை வைத்துக் கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால். சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்?
எனது கூட்டங்களுக்கு மக்கள் நெருக்கடியாக நின்று கேட்கும் இடத்தைத்தான் ஒதுக்குகிறீர்கள். உங்கள் எண்ணம்தான் என்ன சார்?. நான் ஒரு அரசியல் தலைவன் என்பதை மறந்திடுங்க. தமிழ் மகனா, என் மக்களை, என் சொந்தங்களை நான் பார்க்கச் சென்றால் என்ன செய்வீர்கள். அப்பவும் தடை போடுவீர்களா? வேண்டாம் சார். இந்த அடக்குமுறை, அராஜக அரசியல் வேண்டாம் சார். நான் தனி ஆள் இல்லை சார். நான் மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் பெண்கள் சக்தியின் சகோதரன், மாபெரும் இளைஞர் இயக்கமாக இருக்கிறோம்.
மறுபடியும் சொல்கிறேன். 2026-ல் இரண்டே இரண்டு பேருக்கு இடையேதா போட்டியே. ஒன்று தவெக – இன்னொன்று திமுக. பூச்சாண்டி காட்டுவதையெல்லாம் விட்டுவிட்டு நீங்க தில்லா, கெத்தா, நேர்மையா எலக்ஷனை சந்திக்க வாங்க. பார்த்துக்கலாம். கொள்கையை பெயருக்கு வைத்துக் கொண்டு குடும்பத்தின் கூட்டணியோடு கொள்ளையடிக்கும் நீங்களா, இல்லை தமிழகத்தின் ஒவ்வொரு வீடுகளில் இருக்கும் நானா? என்று பார்த்துவிடலாம். இனி மேல் தடை போட்டால் நான் மக்களிடமே அனுமதி கேட்டுக் கொள்வேன்.
எனக்கு தடைபோடும் திமுக ஆட்சிக்கு வர வேண்டுமா?. உங்களுக்கு நல்லது செய்ய வந்துள்ள ஆட்சிக்கு வர வேண்டுமா? கேட்டதா மை டியர் சிஎம் சார். இந்தப் போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்கவிடாது. துரத்திக் கொண்டே வரும். தவெகவுக்கு வெற்றி நிச்சயம். நம்பிக்கையாக இருங்கள்’’ என்றார்.
அது சரி விஜய் தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் போட்டி என்கிறார். 2026ல் ஓய்வு கொடுக்கப் போகிறேன் என்கிறார். இது பற்றி தமிழக அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், மறைந்த ஆளுமையான முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் இருக்கும்போதே கடுமையான சவால்களை எல்லாம் எதிர்கொண்டு கட்சி ஆரம்பித்தவர் விஜயகாந்த்!
கட்சி ஆரம்பித்த புதிதில் ‘மக்களோடும் கடவுளோடும்தான் கூட்டணி’ என்றார். அதன் பிறகு அரசியல் சூட்சமங்களை சூசகமாக உணர்ந்த விஜய்காந்த் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பிடித்தார். அவரது உடல் நலம் நன்றாக இருந்திருந்தால், இந்நேரம் விஜய் அரசியல் வருகைக்கு இவ்வளவு வரவேற்பு இருந்திருக்காது. ஒருவேளை அரசியலுக்கே விஜய் வந்திருக்கமாட்டார்.
2026 விஜய் தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, தி.மு.க.வின் எதிர்ப்பு வாக்குகள், இளைஞர்கள், இளம்பெண்கள் வாக்குகளை த.வெ.க. பெற்று மீண்டும் தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திவிடும் என்பதுதான் யதார்த்த உண்மை. விஜய்யால் உடனடியாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துவிட முடியாது. தமிழகத்தில் அப்படியொரு புரட்சி ஏற்படுவதற்கான அவசியம் இல்லை என்பதுதான் உண்மை. தன்னுடன் சில தேர்தல் வியூக நிபுணர்களை வைத்திருக்கும் விஜய்க்கு இது தெரியவில்லையா? என்பது புரியாத புதிர்தான்!
‘கொள்கையை வைத்துக்கொண்டு தி.மு.க. கெள்ளையடிக்கிறது’ என்கிறார். இதனை யாரும் மறுக்காவிட்டாலும், தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி நிதிநிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் உணரவேண்டும். நிதிநிலைமைக்கு ஏற்பதான் திட்டங்களை தீட்ட முடியும் என்பதையும் விஜய் உணரவேண்டும்.
தமிழகத்தைப் பொறுத்தளவில் ஆளுகிற கட்சிகள் கஜானாவை காலி செய்துவிடுகின்றனர் என்று ஆட்சிப் பொறுப்பிற்கு வரும் கட்சிகள் குற்றம் சாட்டுவது வாடிக்கை. இதையெல்லாம் விஜய் சமாளிக்க வேண்டும். தவிர, விஜய் தனித்துப் போட்யிடுவது, விஜய் தலைமையில் கூட்டணி வைத்து போட்டியிடும் பட்சத்தில் ஸ்டாலினுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பில்லை… எடப்பாடி பழனிசாமிக்கு ஓய்வு கொடுத்துவிடுவார். அதன்பிறகு விஜய் எப்படி கட்சியை நடத்துவார் (த.வெ.க.வில் இருந்து கொத்துக்கொத்தாக அறிவாலயம் சென்றுவிடுவார்கள் & இதுதான் அரசியல்)என்பதே மில்லியன் டாலர் கேள்வியாகும் என்பதுதான் உண்மை’’ என்றனர்.