‘அ.தி.மு.க.வை கபளீகரம் செய்ய முயற்சித்தவர்கள்… ஆட்சியை கவிழ்க்க 18 எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்தியவர்கள்… கைக்கூலிகள்…’ என டி.டி.வி.யை மறைமுகமாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டிய நிலையில், எடப்பாடி சி.எம். ஆனது எப்படி என போட்டுடைத்திருக்கிறார்.
செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய டிடிவி தினகரன், கூவத்தூரில் நடந்த சில விஷயங்கள் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘‘சாத்தான் வேதம் ஓதுவது போல நன்றியைப் பற்றிய எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும் தமிழக மக்களும் முட்டாள் என நினைத்து எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். துரோகத்தைத் தவிர வேறு எதுவும் தெரியா பழனிசாமி, நன்றியைப் பற்றிப் பேசுகிறார்.
ஜெயலலிதா ஆட்சியைக் கலைக்க முற்பட்ட போது பாஜக காப்பாற்றியதாக எடப்பாடி பேசுகிறார். அதுவே தவறு! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். அவருக்குப் பதிலாக சசிகலாவை முதல்வராக்க எம்எல்ஏக்கள் அனைவரும் முடிவு செய்து, கவர்னரிடம் மனு கொடுத்தார்கள். அப்போது திமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த போது, இவரைக் காப்பாற்றியது பாஜக இல்லை. அதிமுக எம்எல்ஏக்கள் தான்.
கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டு வாக்களித்து தான் எடப்பாடி முதல்வராகக் காரணம். அப்போது கூட நான்தான் முதல்வர் எனச் சொன்னால் எம்எல்ஏக்கள் பலரும் ஆதரவு கடிதத்தில் கையெழுத்து போட மாட்டார்கள்.. கையெழுத்துகளை வாங்கிய பிறகு அதைச் சொல்லுங்கள் எனச் சொன்னவர் எடப்பாடி பழனிசாமி.
அதன் பிறகு சசிகலா சிறைக்குச் சென்றபோது, 122 எம்எல்ஏக்களில் எத்தனை பேர் வெளியேற இருந்தார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தியது யார் என்பது அவருக்கே தெரியும். எடப்பாடியை எல்லாம் முதல்வரா ஏற்க முடியாது எனச் சொல்லி பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். செம்மலை எல்லாம் சுவர் எகிறிக் குதித்து ஓடினார். அவர்களை எல்லாம் பாதுகாத்து வைத்து, அவர்கள் வாக்களித்தாலேயே எடப்பாடியால் முதல்வராக முடிந்தது. ஆனால், அந்த நன்றியை எல்லாம் மறந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி’’என்றார்.