பாஜகவிலிருந்து தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஓரங்கட்டப்படுகிறார் என தகவல்கள் வெளியான நிலையில் இன்று சென்னையில் நடைபெறும் பாஜக மையக் குழு கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளமாட்டார் என தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் அண்ணாமலைக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் அவர் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஓய்வில் இருக்கிறார்.
அண்மையில் தமிழக பாஜகவில் பலருக்கு பதவிகள் கொடுக்கப்பட்டபோதும்கூட அண்ணாமலைக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. அமித்ஷாவுடனான ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் அண்ணாமலை ஓரங்கட்டப்படுகிறார் என சொல்லப்பட்டது. மேலும் பால் பண்ணை வைக்க முயற்சிப்பதாக அண்ணாமலையே குறிப்பிட்ட போது கூட அவர் அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா என்ற கேள்வியும் எழுந்தது. மேலும் அந்த அறிக்கையில் பாஜக என்பதை குறிப்பிடாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்றே குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் சென்னையில் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடக்கும் பாஜக மையக் குழுக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்க மாட்டார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாலும் அவரை மருத்துவர்கள் ஓய்வு எடுக்க சொன்னதாலும் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வேளை அவருடைய உடல் ஒத்துழைத்தால் மதியத்திற்கு மேல் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
