புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், வரும் 26ல், டெல்லியில் நடக்க உள்ளது. தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது டி.ஜி.பி. நியமனம்!
தமிழக காவல் துறை தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால், கடந்த மாதம், 31ல் ஓய்வு பெற்றார். இதையொட்டி, புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, மத்திய அரசுக்கு பட்டியல் அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த பட்டியலில் தன்னையும் சேர்க்க வேண்டும் என, டி.ஜி.பி., பிரமோத்குமார், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை காரணமாக கூறி, பட்டியல் அனுப்பாமல், அரசு காலம் தாழ்த்தி வந்தது. மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பட்டியலில் ஜூனியரான வெங்கட்ராமனை பொறுப்பு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யாக நியமித்து உள்ளது.
இதற்கிடையே, கடந்த ஆக., 29ம் தேதி, சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,க்கான தகுதி பட்டியலை, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இப்பட்டியல், இம்மாதம், 1ம் தேதி, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு போய் சேர்ந்தது.
இப்பட்டியலில், தமிழக தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், போலீஸ் உயர் பயிற்சியக இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோட் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இவர்கள் மீது, குற்ற வழக்குகள் உள்ளதா, லஞ்ச விவகாரம் உள்ளதா என்றெல்லாம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, தமிழக காவல் துறையின் புதிய தலைவர் மற்றும் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான கூட்டம், டில்லியில் வரும் 26ம் தேதி, யு.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடக்க உள்ளது. இதில், தலைமை செயலர், உள்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.