‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி…’ என்ற நாட்டுப்புற பாடல் வரிகள் யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ? எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்துகிறது என பொறுமிக்கொண்டிருக்கிறார்கள் அ.தி.மு.க.வில் உள்ள சீனியர்கள்.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வன்னியர்களுக்கு இடஒடுக்கீடு வழங்கியதால் முக்குலத்தோர் சமுதாயத்தினர் அ.தி.மு.க.வை புறக்கணித்ததன் விளைவுதான் தென்மாவட்டங்களில்¢ பெரும் தோல்வியைச் சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி!

இந்த நிலையில்தான் ‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்பேம்…!’ என்ற எழுச்சிப் பயணத்தில் முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக,  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு, அப்பகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முத்தரையர் சமுதாயத்தினரை கொதிப்படைய வைத்திருக்கிறது. தவிர, தென்மாவட்டங்களில் உள்ள தலித் சமுதாய வாக்குகளும் அ.தி.மு.க.வுக்கு விழுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இது பற்றி அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். ‘‘சார், கடந்த சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை திடீரென்று எடப்பாடி பழனிசாமி வழங்கியதால், தென்மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை இழந்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவேண்டும். அவருக்கு பாரத ரத்னா விருதும் வழங்கவேண்டும்’ என பேசினார்.

நத்தம் தொகுதியைப் பொறுத்தளவில் அங்கு சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான முத்தரையர் வாக்குகள் உள்ளது. அங்கு வெற்றி தோல்வியை தீர்மானிப்பதே முத்தரையர்கள். எடப்பாடி பழனிசாமி பேசியது நத்தம் தொகுதியில் போட்டியிடும் நத்தம் விஸ்வநாதனுக்கே எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளது. எந்த இடத்தில் எப்படிப் பேசவேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு  ‘சாதிய அரசியல்’ தெரியவில்லை. ஏற்கனவே, அ.தி.மு.க.வில் முத்தரையர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். அதற்கு முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் முன்பு காரணமாக இருந்தனர்.

தற்போது, எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனபிறகும் முத்தரையர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கேட்டால், ‘ஒற்றுமை இல்லை’ என்ற ஒற்றை வார்த்தையை எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். கொங்குமண்டத்தில் ஒற்றுமை இருக்கிறதா? அங்கு எடப்பாடியின் சமுதாயத்தைச் சேர்ந்த சீனியரான செங்கோட்டையனே போர்க்கொடி தூக்கி வருகிறார். அங்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மத்திய மாவட்டத்தில் அடர்த்தியாக வசிக்கும் முத்தரையர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க எடப்பாடி பழனிசாமி ஏன் மறுக்கிறார்.

தவிர, நத்தத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது தலித் சமுதாய வாக்குகளையும் அ.தி.மு.க.வுக்கு எதிராக திரும்பியிருக்கிறது. இது குறித்து ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. எடப்பாடி பழனிசாமி எந்த மண்டலத்தில் யார் அடர்த்தியாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து இனியாவது பேசவேண்டும்’’ என ஆவேசத்துடன் பேசி முடித்தனர்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal