மதுரை தவெக மாநாட்டில் தன்னை தூக்கி வீசிய பவுன்சர் மீது, பெரம்பலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தவெக தொண்டர் தனது தாயுடன் சென்று புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும் விஜயின் ரசிகர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாநாட்டில் விஜய் தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறு நடைமேடையில் நடந்து வரும் போது, உற்சாக மிகுதியால் தொண்டர்கள் கூச்சலிட்டபடி அவரை நெருங்க முயன்றனர். விஜய்க்கு பாதுகாப்பாக ஏராளமான பவுன்சர்கள் அவரைச் சுற்றி சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
அப்போது தவெக தொண்டர் ஒருவர் நடைமேடையில் ஏறி விஜய் அருகே சென்றார். அதனைப் பார்த்த ஆஜானுபாகுவான பவுன்சர் ஒருவர் அவரைக் குண்டு கட்டாக தூக்கி வீசினார். இதனைத் தொடர்ந்து அந்த தொண்டர் நடைமேடையின் பக்கவாட்டில் அமைக்கப்பட்டிருந்த கம்பியைப் பிடித்தவாறு தொங்கி பிறகு மெதுவாக கீழே இறங்கினார். இந்த காட்சிகள் தொண்டர்களால் செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக வைரல் ஆகி வந்தது.
இந்நிலையில் அவ்வாறு தூக்கி வீசப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர், பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான சரத்குமார் எனத் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து சரத்குமாரின் தாயார் சந்தோசத்திடம் கேட்டபோது உருக்கமாக பதிலளித்தார். திருச்சியில் நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்ற தனது மகன், விஜயைப் பார்க்கும் ஆர்வத்தில் மதுரைக்கு சென்றுள்ளார்.
அங்கு ஆர்வ மிகுதியால், விஜய் நடைமேடையில் நடந்து வரும் பொழுது அவரின் அருகே செல்ல முயற்சித்த போது, அவரது பாதுகாவலர்கள் தனது மகனைக் குண்டு கட்டாக தூக்கி கீழே வீசி விட்டதாக உருக்கமாகத் தெரிவித்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகக் குறிப்பிட்ட தாய், என் மகனை தூக்கி வீசியதால், கை கால் ஒடிந்து இருந்தாலோ, அல்லது உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருந்தாலோ யார் பதில் சொல்வது? என் மகனை எனக்கு யார் திருப்பி தருவார்கள்? எனக் கேள்வி எழுப்பினார்
இந்நிலையில், தவெக தொண்டர் சரத்குமார் மற்றும் அவரது தாயார் சந்தோசம் ஆகிய இருவரும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகனிடம் விஜய் மற்றும் பவுன்சர்கள் மீது நேற்று புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில், தவெக தலைவர் விஜய் மற்றும் 10 பவுன்சர்கள் மீது 3 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விஜய் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியும்!