‘எந்த நம்பிக்கையின் அடிப்படையில் உலக ஐயப்ப மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்?’ என பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் அழைப்பை ஏற்று உலக ஐயப்ப மாநாட்டுக்கு செல்கிறார். இது எந்தவிதமான நம்பிக்கை என அவர் கூற வேண்டும். இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக முதல்வரின் செயல்கள் உள்ளன.
இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றுபவர் என்ற அடிப் படையில் விசிக வன்னியரசு, ராமர் குறித்து பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன். சமூக நீதியையும் சமத்துவத்தையும் போற்றுவது கம்பராமாயணமும் ராமரும்தான். சட்டம் ஒழுங்கு சீர்குலைவு காரணமாகவே தமிழகத்தில் சாதிய கொலைகள் நடந்து வருகின்றன.
இதனை தடுக்க தமிழகத்தில் ஏன் சிறப்பு சட்டம் கொண்டுவர முடியவில்லை? தமிழ் முகமூடி அணிந்து கொண்டு சி.பி.ராதாகிருஷ்ணன் வருகிறார் என முதல்வர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்களின் பாதுகாவ லர்கள் என கூறுபவர்கள், ஏன் ஒரு தமிழரை குடியரசுத் துணைத் தலைவராக ஆதரிக்க மறுக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.