அரசியல்வாதிகளுக்கு இணையாக அரசு அதிகாரிகளும் முறைகேடாக பணம் கோடிக் கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். ஒரு அரசு அதிகாரி ரூ.3 கோடியை பாத்ரூமில் எரித்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பீகாரில் ஊரக வளர்ச்சி துறையின் சூப்பிரண்ட் இன்ஜினியராக இருப்பவர் வினோத் குமார் ராய். இவர் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து அதிகளவில் லஞ்சம் வாங்கி தனது வருமானத்துக்கு அதிகமாக அதிகமாக சொத்துகளை குவித்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு புகார் சென்றது.
இந்த புகாரை தொடர்ந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் பாட்னாவில் உள்ள அவரது வீடு மற்றும் சிதாமாரி எனும் பகுதியில் அமைந்து இருக்கும் அலுவலகம் உள்ளிட்டவற்றில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது அவரது வீட்டு கழிவறையில் எரிந்த ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் பொருளாதார குற்றப்பிரிவினர் சோதனைக்கு வருவதை அறிந்த வினோத் ராய் தனது மனைவி பப்ளி ராயுடன் சேர்ந்து வீட்டில் உள்ள பணத்தை எரிக்க முயன்றது தெரியவவந்தது.
அந்த பணத்தை எரித்து கழிவறையில் போட்டதும் தெரியவந்தது. இதனை கேட்டு அதிகாரிகள் அதிர்ந்து போயினர். அந்த தம்பதி எவ்வளவு பணத்தை எரித்தனர் என்பது உடனடியாக தெரியவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி முதல் ரூ3 கோடி வரையிலான பணத்தை தீயிட்டு எரித்து இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் அவர் தனது வருமானத்தை மீறி சொத்து குவித்து வைத்திருப்பது தெரியவந்தது. அதாவது வினாத் குமார் ராய்க்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.
12 வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்திருப்பதும், பல இடங்களில் பிளாட்டுகள் வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இந்த சோதனையின் முடிவில் வினோத் குமார் ராய் வீட்டில் இருந்து ரூ.35 லட்சம் ரொக்கம், அரைக்குறையாக தீயில் எரிந்து இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் முழுவதுக எரிந்து சாம்பலாகி கிடந்த ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல் தங்கக்கட்டிகள், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வினோத் ராயை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சொத்துக்களுக்கான நிதி எங்கிருந்து வந்தது, அதற்கான முறையான ஆவணங்களை கேட்டு வருகின்றனர். அவரது மனைவி பப்ளி ராயிடமும் இதுபற்றி விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதோடு சட்டவிரோதமாக லட்சம் லட்சமாக லஞ்சம் கைமாறி இருக்கலாம் என்று போலீசார் நினைக்கின்றனர். இதனால் விரைவில் இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் என்ட்ரி கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.