சென்னை கோயம்பேடு, 100 அடி சாலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் சம்பந்தப்பட்ட விடுதி அறைக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு சென்னையைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை போலீஸார் பத்திரமாக மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அழைத்து வந்த சென்னையைச் சேர்ந்த அஞ்சலி, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சிறுமியின் தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதால் தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து தனியாக சென்று விட்டார். இதனால் தவிப்புக்குள்ளான சிறுமி தனது தாயின் தோழியான அஞ்சலியின் பராமரிப்பில் 3 ஆண்டுகளாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அஞ்சலி சிறுமியிடம் ஆசை வார்த்தைகூறி, பாலியல் தொழிலில் தள்ளியது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
7 பெண்கள் தப்பி ஓட்டம்: பாலியல் தொழிலில் சிக்கி மீட்கப்பட்டவர்கள், குடும்ப பிரச்சினையால் வீட்டை விட்டு வெளியேறி சாலை ஓரங்களில் திரியும் அப்பாவி பெண்கள் மீட்கப்பட்டு மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 26 பெண்கள் மீட்கப்பட்டு மயிலாப்பூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் குஜராத், பிஹாரைச் சேர்ந்த வட மாநிலங்களைச் சேர்ந்த 7 பெண்கள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை மயிலாப்பூர் போலீஸார் தேடி வருகின்றனர்.