தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம்! தமிழகத்தை மீட்போம்!’ என எழுச்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூருக்கு வருகிற 24ம் தேதி எழுச்சிப் பயணத்திற்கு வருகிறார் எடப்பாடி பழனிசாமி!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் துறையூர் சட்டமன்றத் தொகுதி வருகை குறித்து, அந்தத் தொகுதியில் உள்ள மூத்த ரத்தத்தின் ரத்தங்கள் சிலரிடம் பேசினோம்.

கோபம்… கொந்ளிப்பு… ஆவேசம் என முகம் மாறிய ர.ரக்களை சற்று ஆசுவாசப்படுத்தி பேச்சு கொடுத்தோம். எடுத்த எடுப்பிலேயே, ‘‘சார், துறையூர் தொகுதிக்கு எடப்பாடி பழனிசாமி வருவதை வரவேற்கிறோம். 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்துதான் இந்த எழுச்சிப் பயணத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருக்கிறார். இந்த எழுச்சிப் பயணத்தின்போதே யார் வேட்பாளர் என்பதையும் முடிவு செய்துவிட்டார்களாம். (நீங்கள்தான் வேட்பாளர் என இப்போதே சிலரிடம் சில லட்சங்களை கறக்க ஆரம்பித்துவிட்டார்களாம்)
அதாவது எடப்பாடி பழனிசாமியின் வருகைக்கு யார் அதிக ‘லட்சங்களை’ கொடுக்கிறார்களோ அவருக்குத்தான் சீட் என்கிற ரீதியில் ஒரு பேச்சு ஓடுகிறது. சிலர் சில லட்சங்களை கொடுத்திருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. ஆனாலும், சிலரிடம் லட்சங்கள் இருக்கலாம். ஆனால், மக்கள் மனதில் இடம்பித்தவர்களால்தான் வெற்றி பெறமுடியும். ஏனென்றால் துறையூர் தொகுதி அ.தி.மு.க.வில் உள்குத்து அதிகம்.
‘துறையூர் தொகுதிக்கு நான்தான் வேட்பாளர்’ என இரண்டு பேர் உற்சாகத்தில் மிதந்து வரும் நிலையிலும், இந்த உள்குத்து அரசியலை எல்லாம் தாண்டி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய சேர்மனுமான க.மனோகரன் களத்தில் இறங்கி வேலை முழுமனதோடு பார்த்து வருகிறார். முதல்வரின் வருகைக்காக நேரடியாகவே மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருவதோடு, நகர் முழுவதும் பிளக் போர்டுகளை வைத்திருக்கிறார். மிகவும் எளிமையாக எல்லோரிடத்திலும் நட்பு பாராட்டக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் களத்தில் நின்றால் தி.மு.க.வாக்குகளே அ.தி.மு.க.விற்கு விழும்!
எனவே, எழுச்சிப் பயணத்திற்கு வரும் எடப்பாடியார், மக்கள் மனதில் யார் இருக்கிறார்கள்? யார் களத்தில் நின்றால் வெற்றி பெறுவார்கள் என்பதையெல்லாம் கணக்குப் போட்டு வேட்பாளர்களை முடிவு செய்யவேண்டும்.
தவிர, மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியை உப்பிலியபுரம் (தற்போதைய துறையூர் தொகுதிதான் முன்பு உப்பிலியபுரம் தொகுதியாக இருந்தது) தொகுதியை உப்பில்லாத ஊர் என விமர்சித்தார். அந்தளவிற்கு உப்பிலியபுரம் தொகுதி (தற்போது துறையூர்) அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்தது.
ஆனால், கடந்த 2016 மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வின் கோட்டையில் தி.மு.க. தொடர்ச்சியாக இரண்டாவது முறை வெற்றி பெற்றது. மூன்றாவது முறையும் வெற்றி பெற முயற்சித்து வருகிறது. எனவே, பண பலத்தைப் பார்க்காமல், மக்களின் மன பலத்தைப் பார்த்து வேட்பாளரை நிறுத்தினால்தான், துறையூர் தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டையாக மாறும்’’ என்றனர் சோகத்துடன்.