சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கே நேரடியாக தொலைபேசியில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கேட்டிருக்கிறார்.
தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க. ஆதரவளிக்காவிட்டால், தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அதிருப்தி ஏற்படும் சூழல் உருவாகியிருக்கும் நிலையில்தான், மு.க.ஸ்டாலின் சமயோசிதமாக ஒரு முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
அதாவது, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழரான சி.பி.ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்ட நிலையில் திருச்சி சிவாவை நிறுத்த பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று மாலை ஆலோசனை செய்ய உள்ளனர். அதில் திருச்சி சிவாவை தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தில் இருந்து இவர் திமுகவின் மாநிலங்களவை எம்பியாகவும் திமுகவின் மாநிலங்களவை குழு தலைவராகவும் இருக்கிறார். 1996, 2002, 2007,2014 மற்றும் 2020 ஆண்டுகளில் திமுக கட்சியில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாநிலங்களவையில் பல தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்தார். அவர் திருநங்கைகளின் உரிமைகள் மசோதாவை 2014 இல் கொண்டுவந்தார், இந்த மசோதா மாநிலங்களவை ஒருமனதாக நிறைவேறியது.
1976 அவசரநிலையின்போது, மாணவராக இருந்த இவர், உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். அரசியல் களத்தில் இவரது பங்களிப்பு 1978-ல் தொடங்கியது. அப்போது திமுக மாவட்ட மாணவர் அணியின் அமைப்பாளராகப் பொறுப்பு வகித்தார். பின்னர், 1982 முதல் 1992 வரை திமுக இளைஞரணியின் துணைச் செயலாளராகப் பணியாற்றினார். இதைத் தொடர்ந்து, 1992 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் அதே இளைஞரணியின் செயலாளராகப் பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டார். மேலும், அவர் திமுகவின் பிரச்சாரச் செயலாளராகவும், துணைப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக திருச்சி சிவாவை நிறுத்த திட்டம் என தகவல் வெளியாகி வருகிறது. குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜக கூட்டணி அதிரடியாக களமிறங்கி உள்ளது. என்டிஏ கூட்டணி சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டு உள்ளார்.
குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் செப்டம்பர் 9 அன்று நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசித் தேதியாகும். தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களுக்காக ஜூலை 21 அன்று பதவி விலகியதால் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவு, பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்ட முடிவெடுக்கும் அமைப்பான நாடாளுமன்ற வாரியத்தால் எடுக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 7 அன்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்கள், பிரதமர் மோடியையும், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவையும் வேட்பாளரைத் தேர்வு செய்ய அதிகாரம் அளித்திருந்தனர். இந்தத் தீர்மானத்தை ஐக்கிய ஜனதா தளத்தின் ராஜீவ் ரஞ்சன் சிங் முன்மொழிய, தெலுங்கு தேசக் கட்சியின் ராம் மோகன் நாயுடு வழிமொழிந்திருந்தார்.
பாஜக தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களிடம் பேசுகையில், 68 வயதான ராதாகிருஷ்ணனை வேட்பாளராகத் தேர்வு செய்தது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுடன் விரிவான ஆலோசனை நடத்திய பின்னரே எடுக்கப்பட்டது என்றார். மேலும், பாஜகவின் மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சிகளையும் சந்தித்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளருக்கு ஆதரவு கோரினர் என்றும் அவர் தெரிவித்தார். வேட்பாளரைப் பொறுத்தே தங்கள் முடிவை அறிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் எங்களிடம் தெரிவித்தனர். குடியரசு துணைத் தலைவர் ஒருமித்த கருத்துடன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று நம்புகிறோம், என்று நட்டா கூறினார்.
திமுக பாஜகவில் இல்லாத, சிறுபான்மையினர் பின்னணியை கொண்ட ஏபிஜே அப்துல்கலாமையே குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்கவில்லை என்பது அரசியல் வரலாறு. இதனால் என்டிஏ வேட்பாளர் யாராக இருந்தாலும் திமுக அவர்களை ஆதரிக்காது என்பதே அரசியல் வரலாறு. இப்போதும் அதே முடிவை திமுக எடுக்கலாம். இதை மையாமாக வைத்து சிபி ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்காமல் போகும். ஆனால் தமிழர் என்பதால் திமுகவிற்கு பிரஷர் வரும் என்பதால் போட்டிக்கு இன்னொரு தமிழரை, அதாவது திருச்சி சிவாவை களமிறக்க.. திமுக – & காங்கிரஸ் திட்டமிடலாம் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.