‘மருத்துவம் படிப்பதற்கு கல்லூரிகளில் இடம் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்களை மாணவர்கள் நம்ப வேண்டாம்’ என காவல் ஆணையர் அருண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘‘நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு மூலமாக மட்டுமே மருத்துவ சேர்க்கைக்கான இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாள்தோறும் சென்னை காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்ததில், மருத்துவப் படிப்புக்கு இடம் பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து இடைத்தரகர்கள் பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகமாக உள்ளன.
எனவே, மாணவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும். மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம். அரசின் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலமும், கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொள்வதன் மூலமாக மட்டுமே மருத்துவ படிப்புக்கான இடத்தை ஆலோசனை செய்ய வேண்டும்’’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.