திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திற்கு நேற்று குடும்பத்துடன் சென்ற பாமக தலைவர் அன்புமணி, தனது தந்தை ராமதாஸுடன் சேர்ந்து தாய் சரஸ்வதியின் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார். இந்த நிகழ்வில் ராமதாஸின் மகள்களும் கலந்து கொண்டனர்.

பாமகவில் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதை தணிக்க பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை கட்சியின் மூத்த தலைவர்கள் மேற்கொண்ட போதிலும் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார்.

அன்புமணிக்கு செயல் தலைவர் பதவி மட்டுமே கொடுக்கப்படும் என்றும் அவருக்கு மீண்டும் தலைவர் பதவி கொடுக்கப்படாது என்றும் தெரிவித்தார். மேலும் செயல் தலைவராக தொடர விரும்பினால், அன்புமணி தொடரலாம். இல்லாவிட்டால் கட்சியை விட்டு வெளியேறிக் கொள்ளலாம் என வெளிப்படையாகவே அறிவித்திருந்தார். மேலும் அன்புமணி மீது பல்வேறு பகீர் குற்றச்சாட்டுகளை எல்லாம் ராமதாஸ் முன் வைத்திருந்தார். அதில் ஒன்றுதான் தாயின் மீது தண்ணீர் பாட்டிலை அன்புமணி வீசினார் என்பதாகும். அண்மையில் ராமதாஸின் 60ஆவது திருமண நாள் கொண்டாட்டத்திற்கு கூட அன்புமணி நேரில் சென்று வாழ்த்தவில்லை. சரஸ்வதிக்கு மட்டும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாகவும் இந்த திருமண நாள் விழாவுக்கு அன்புமணி வராதது வருத்தமளிப்பதாக ராமதாஸ் வேதனை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி மனைவி சவுமியா, மகள்கள், மருமகன்கள், பேரக் குழந்தைகளுடன் அன்புமணி, தைலாபுரம் தோட்டத்திற்கு வந்தார். அங்கு கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது ராமதாஸும் உடன் இருந்தார்.

கடந்த மே 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு பிறகு ராமதாஸும் அன்புமணியும் ஒன்றாக சந்தித்துள்ளனர். இது கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.மேலும் ராமதாஸ் அண்மையில் நடத்திய பொதுக் குழு கூட்டத்தில் தனது மகள்கள் காந்தி, கவிதாவுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தார். அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள அன்புமணியின் இல்லத்திற்கு சரஸ்வதி அம்மாள் வந்திருந்தார். அப்போது கூட மகனை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்ததாக சொல்லப்பட்டது. தற்போது அன்புமணியும் ராமதாஸும் சந்தித்துக் கொண்ட போது ஏதாவது பேசி கொண்டனரா என தெரியவில்லை. ஆனால் அடுத்த தேர்தலுக்குள் இருவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி நடந்து வருவதாக கட்சி சார்பில் சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பு பற்றி தைலாபுரம் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘இந்த சந்திப்பு ‘கண்கள் பனித்தன; இதயம் இனித்தது’ என்ற கலைஞர் பாணியில் நடந்தது என்றுதான் சொல்லவேண்டும்! பா.ம.க. பிளவுபட்டால் யாருக்கு கொண்டாட்டம் என்பதை அன்புமணி நன்றாக உணர்ந்துவிட்டார். அதனால்தான் மனம்மாறி அம்மாவின் பிறந்த நாளைக்கு வந்துவிட்டார்.

அப்போது, அன்புமணியைப் பார்த்த ராமதாஸின் கண்களும் பனித்தன! விரைவில் இருவரும் ஒன்றுசேர்ந்த அறிவிப்பு நிகழ்வு விரைவில் வெளிவரும். சமதானத்திற்கான அனைத்துவிதமான ஆயத்தத்திற்கும் அன்புமணி தயாராகிவிட்டார்’’ என்றனர்.

நமக்கும் சந்தோஷம் தானே..?

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal