‘‘2026 சட்டசபை தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்’’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல ஆணைகள், மகளிர் திட்டம், தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 19 ஆயிரத்து 785 பேருக்கு, ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
அதைத்தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘திருப்பூரில் மட்டும் 133 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சுமார் ரூ.10,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை திருப்பூர் மாவட்டத்திற்கு செய்திருக்கிறோம். அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் செய்த ஒரு திட்டத்தை அவர்களால் கூற முடியுமா?
ருப்பூரில் 5 பாலங்களை கட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்தபோது அதிமுக ஆட்சியில் அதை முடக்கினர். தொடர்ந்து அடி மேல் அடி விழுவதால் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. விரக்தியில் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னை எம்ஜிஆர், ஜெயலலிதா என நினைத்துக்கொண்டு சவுண்டு விடுகிறார்.
சுந்தரா டிராவல்ஸ் பேருந்தை எடுத்துக் கொண்டு ஊர், ஊராக சென்று எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புகிறார். இந்த நல்லாட்சி என்றும் தொடரும். உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும். எந்த தைரியத்தில் மேற்கு மண்டலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கினார் எனத் தெரியவில்லை.
மேற்கு மண்டலத்துக்காரர் என சொல்லிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை விட, நம் திராவிட மாடல் ஆட்சியில்தான் மேற்கு மண்டலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கும் அதிக திட்டங்கள் செய்துள்ளோம். 2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்தில் இருந்துதான் தொடங்கும்.
அரசின் திட்டங்களை முடக்க உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுகவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிவி.சண்முகம் ரூ.10 லட்சம் அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இது அவர்களுக்கு அவமானமாக இல்லையா?. தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடரும்.
நீராறு, நல்லாறு, ஆனைமலையாறு என்ற கனவுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். மாணவர்கள், இளைஞர்களுக்காக ரூ.9 கோடியில் நவீன நூலகம் அமைக்கப்படும். திருப்பூரில் ரூ.5 கோடியில் பன்னோக்கு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும். ஊத்துக்குளியில் வெண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.6.5 கோடியில் அமைக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
