‘அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆகலாம்’ என விஜய்க்கு சிலர் யோசனை சொன்னார்கள். ஆனால், ஆதவ் அர்ஜுனா போன்றோர், ‘தமிழகத்தின் தரவுகள் என்னிடம் இருக்கிறது’ எனக்கூறி ‘2026ல் விஜய்தான் முதல்வர்’ எனக் கூறி ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கியிருப்பதை நினைத்து விஜய் கொந்தளித்துப் போயிருக்கிறாராம்.
இது பற்றி த.வெ.க.வில் உள்ள சில ‘சீனியர்’களிடம் பேசினோம்.
‘‘சார், மக்களுடனும் தெய்வத்துடனும்தான் கூட்டணி என சொன்ன விஜயகாந்தே, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தபிறகுதான் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தைப் பெற்றார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோதும், விஜய்யை விட இளைஞர்களைத்தாண்டிய பெருங்கூட்டம் அவருக்கு ஆதரவளித்தது. ஆனாலும், முதல் தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் விஜயகாந்த் வெற்றி பெற்றார். ஆனால், இன்றைக்கு உள்ள அரசியல் சூழ்நிலையில் விஜய் தலைமையில் அமையும் கூட்டணியில் விஜய் ஒருவர் மட்டுமே வெற்றி பெறுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
காரணம், தமிழக முழுவதும் மாவட்ட செயலாளர் நியமனம் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் மாவட்ட பொறுப்பாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகர், நகர், பேரூர், ஒன்றியம், ஊராட்சி, கிளைக் கழகம் என கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும் அடிப்படை கட்டமைப்பான ஊரக, நகர்ப்புற நிர்வாகிகள் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பூத் ஏஜெண்டுகளை நியமித்து விட்டதாக தலைமைக்கு கணக்கு காட்டி இருக்கின்றனர் தலைமை கழக நிர்வாகிகள். உண்மையில் அவர் கைகளுக்கு பட்டியல் சென்றது என்னவோ உண்மைதான். ஆனால் மாவட்ட செயலாளர்கள் தான் உரிய முறையில் பூத் கமிட்டிகளை நிரப்பாமல் ஒரே பகுதியில் இருக்கும் இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு என வேறு ஊர்களில் இருக்கும் பூத் கமிட்டி பணிகளை கொடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலம் மாவட்ட செயலாளர்கள் கொடுத்த பூத் கமிட்டி பட்டியலை சரிபார்த்த போது பெரும்பாலானோர் நகர் பகுதிகளில் இருந்து கொண்டு கிராமப் பகுதிகளுக்கு ஏஜென்ட்களாக நியமிக்கப்பட்டுள்ளது தெரிய வந்திருக்கிறது.
இதனால் கடும் கோபமடைந்த விஜய் மாநில நிர்வாகிகளை கடுமையாக சாடி இருக்கிறார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இன்னும் பல பகுதிகளுக்கு ஒன்றிய அளவிலான நிர்வாகிகளையே மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யவில்லை எனவும், கோவையைப் போல தங்கள் பகுதியிலும் விஜய் பூத் கமிட்டி ஏஜென்ட் கூட்டத்தை நடத்தினால் ஆட்களை திரட்ட வேண்டுமே என்பதற்காக தங்கள் பகுதிகளில் இருக்கும் ஆதரவாளர்களை கிராமப்புறங்களில் இருக்கும் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் போல நியமித்துள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய போது அந்த புகார் உண்மைதான் என்பது தெரிய வந்தது. உதாரணத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் 3 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில் ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றிய அளவிலான நிர்வாகிகளெ இன்னும் நியமனம் செய்யப்படவில்லை.
மேலும் சில கிராமங்களை தேர்ந்தெடுத்து அங்கு இருக்கும் நபர்களிடம் பூத் கமிட்டி ஏஜென்ட் யார் எனக் கேட்டபோது. தாங்கள் இல்லை என சொல்லிவிட்டனர். ஆனால் கிராமங்களுக்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் பூத் கமிட்டி ஏஜென்ட்கள் என மாநில தலைமைக்கு மாவட்ட செயலாளர்கள் மூலம் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கிறது. திண்டுக்கல்லில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே நிலைதான். தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அடிப்படை கட்டமைப்பையே வலுப்படுத்தாமல் இருப்பது தேர்தலின் போது விஜய்க்கு நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும்.
அடிப்படை கட்டமைப்பே இல்லாத ஒரு கட்சி ஒரு சட்டமன்றத் தொகுதியில் எப்படி வெற்றி பெறும் என்ற அடிப்படை உண்மை கூட புரியாத ஆதவ் அர்ஜுனா போன்றவர்களை வைத்துக்கொண்டு, தேர்தலில் விஜய் எப்படி வெற்றிப் பெற போகிறாரா?’’ என்றனர்.
ஆக மொத்தத்தில், தி.மு.க.வை மீண்டும் அரியணையில் அமர்த்திவிட்டு, த.வெ.க. தமிழகத்தில் தடம் பதிக்காமல் போய்விடுமோ என வருத்தப்படுகின்றனர் உண்மையான விஜய்யின் விசுவாசிகள்!
