ஓ.பி.எஸ்., பிரேமலதா விஜயகாந்த் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘செக்’ வைத்தார். இதற்கு எதிர்வினையாக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் பா.ஜ.க. மூலம் எடப்பாடி பழனிசாமி வைக்கும் ‘செக்’கில் தி.மு.க.வில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படலாம் என்கிறார்கள்.

தி.மு.க.விற்கு பா.ஜ.க. மூலம் எடப்பாடி பழனிசாமி அப்படி என்ன ‘செக்’ வைக்கிறார் என்பது பற்றி அவருக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம்.

‘‘சார், சமீபத்தில் தமிழ்நாடு வந்த பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தூத்துக்குடியில் பிரதமர் மோடியை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திக்கும் போது அவருடன் அதிமுக மாஜி அமைச்சர்களும் உடன் இருந்தனர். எடப்பாடி – மோடி இடையே தனியாக சந்திப்பு நடக்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி & – மோடி இடையே தனிப்பட்ட முறையில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் 10 நிமிடம் தனியாக பேசி உள்ளனர். போனில் சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசியுள்ளனர்.

தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். அதேபோல் திமுக அமைச்சர்கள் மீது உள்ள வழக்குகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். முக்கியமாக 4 திமுக அமைச்சர்கள் பெயரை சொல்லி அவர்களின் வழக்குகளை விசாரிப்பதை பற்றி எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார். தவிர, சமீபத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடந்தும் நீதிமன்றம் வாயிலாக நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் அமைச்சர் குறித்தும் பேசியிருக்கிறார்களாம். அந்த அமைச்சர் உங்கள் கட்சியின் ‘முன்னாள்’ தலைவரிடம் நல்ல உறவில் இருந்துகொண்டுதான் தப்பித்து வருகிறார் என்று ‘மேலிடத்தில்’ கூறியிருக்கிறார்களாம்.

திமுகவிற்கு எதிராக வியூகங்களை வகுக்க மத்திய உளவுத்துறை ரிப்போர்ட் தேவை என்றும் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் கேட்டு உள்ளார். தவிர, உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக சில தனிப்பட்ட புகார்களையும் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் வழங்கி உள்ளார்.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுச்சிப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மேற்கு மண்டலத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கி உள்ளது. இதில் விரைவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடியட்டும், அதன் பிறகு தமிழக சட்டமன்றத் தேர்தல் ‘களை கட்டும்’ பாருங்கள் என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal