2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும். எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. வரும்! 3வது இடத்தைத்தான் த.வெ.க. பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின.
‘‘த.வெ.க. மூன்றாவது இடத்தைப் பிடிக்கக்கூடிய அணி அல்ல… முதல் இடத்தைப் பிடிக்கும் அணி என்பதை விஜய்யின் சுற்றுப்பயணத்தின்போதுதெரிந்து கொள்வீர்கள்’’ என த.வெ.க.வினர் கூறிவந்தனர்.
இதற்கிடையே ராகுல்காந்தியை சந்திக்க விஜய் நேரம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, விஜய்யுடனும், அ.தி.மு.க.வுடனும் யாரும் கூட்டணிக்குப் போய்விடக்கூடாது என்பதில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காய் நகர்த்தி வருகிறார்.
இந்த நிலையில்தான், விஜயுடன் கூட்டணி வைக்க சின்ன கட்சிகள் கூட ரெடியாக இல்லை. அப்படி இருக்க, பெரிய கட்சியான நாம் விஜயுடன் சென்றால் சரியாக இருக்காதே. அவரை சந்திக்கலாமா வேண்டாமா என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ராகுல் காந்தியும் – சோனியா காந்தியும் விவாதித்திருக்கின்றனர்.
தேர்தலுக்குத் தயாராவதற்காக விஜய் பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார். ராகுல் காந்தியுடனான சந்திப்பு தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியைப் பிரிக்கும் நோக்கிலும் இச்சந்திப்பு இருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ராகுல் காந்தியைச் சந்திப்பதற்கான அனுமதிக்கு விஜய் தரப்பு கேரளாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் காங்கிரஸ் தலைமைக்கு தூது அனுப்பியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும், இது தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இச்சந்திப்பு நடந்தால் அது தி.மு.க-வை கடுமையாக அதிருப்தியடையச் செய்யும் என்பதால், ராகுல் காந்தி இதற்கு ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.தி விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், கட்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கூட்டணி மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். ‘‘கட்சி அழிந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் வளர வேண்டுமென்றால், தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியே வரவேண்டும். தமிழக வெற்றிக் கழகம் அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்தால், ஆட்சியில் காங்கிரஸுக்குப் பங்கு கிடைக்கும். 50, 60 ஆண்டுகளாக அரசியல் அதிகாரம் காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால், தமிழக வெற்றிக் கழகம் அல்லது அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பது அவசியம். அப்போதுதான் நமக்கு பதவி கிடைக்கும். அமைச்சர் பதவிகள் கிடைத்தால்தான் கட்சி வளரும். தமிழகத்தில் பா.ஜ.க. கூட வளர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் தி.மு.க.விடம் ‘கிடைப்பதை வாங்கிக்கொண்டு’ காலம் தள்ளுகிறது. இதில் எதிர்கால காங்கிரசுக்கு நல்லதல்ல’ என்று அவர்கள் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.
விஜயின் தூது குறித்து காங்கிரஸ் கட்சியின் மேலிடம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. விஜயின் முயற்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி, ராகுல் காந்தியின் ஒப்புதலுக்காகக் காத்திருப்பதாக தகவல்கள் நிலவுகின்றன.
ஆனாலும், காங்கிரஸ் தரப்பு நிர்வாகிகள் சிலர், ‘‘கூட்டணி பற்றி இப்போது பேசுவது தேவையற்றது. தி.மு.க-வுடன் கட்சி மேலிடத்துக்கு நல்ல நெருக்கம் இருக்கிறது. கூட்டணி பற்றி அவர்களே முடிவெடுத்துக்கொள்வார்கள்’’எனக் கூறியுள்ளனர்.
ஆனாலும், காங்கிரசில் உள்ள நிர்வாகிகள் தி.மு.க.வை வைத்துக்கொண்டு மறைமுக பலனை அடைந்துகொண்டிருக்கிறார்கள். ஏன். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கூட ‘டெண்டர்’ போன்ற சில பசையுள்ள விஷயங்களில் தன்னை வளப்படுத்திக்கொள்கிறார். ஆனால், தொண்டர்கள் 99 சதவீதம் பேர் ‘த.வெ.க.வுடன் கூட்டணி வைத்து துணை முதல்வர் பதவி பெறவேண்டும்’ என்றுதான் விரும்புகிறார்கள்.
பார்ப்போம் ராகுல்காந்தி என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று..?
