தேனியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் திமுக எம்பி.தங்க தமிழ்ச்செல்வனும், எம்எல்ஏ.மகாராஜனும் மேடையில் கலெக்டர் முன்னிலையில் “போடா வாடா” என்று ஒருமையில் பேசி சண்டையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எம்.எல்.ஏ.மகாராஜனுக்கு கண்டனம் தெரிவித்து தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு நிலவுகிறது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ஜக்கம்பட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் நேற்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதற்கட்டமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கினார்கள். அதன் தொடர்ச்சியாக கட்டுமான நல வாரியத்தில் சார்பில் விபத்து நிவாரண தொகைக்கான ஆணையை தேனி எம்.பி.தங்க தமிழ்ச்செல்வன் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு வழங்க முற்பட்டார். அப்போது அந்த ஆணையினை ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் எம்.பி.கையில் இருந்து பறித்து இது நான் வாங்கி கொடுத்தது, நான் தான் கொடுப்பேன் என பொதுமக்கள் முன்னிலையில் பறித்து பயனாளிக்கு கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ மகாராஜனை பார்த்து “போடா மு* பயலே” என்று கலெக்டர் முன்னிலையிலேயே பகிரங்கமாக கூறினார். தனது தொகுதியில், தொகுதி மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மேடையிலேயே கூறியதால் அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏ மகாராஜன் “யாரைப் பார்த்து மு** பயலே என சொல்ற.. தொலைச்சிருவேன்”என்று தங்கதமிழ்செல்வனை பார்த்து சீறினா

திமுக எம்.பி.யும், திமுக எம்எல்ஏவும் சண்டையிடுவதை பார்த்த கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பதறிப்போனார். உடனடியாக சுதாரித்த செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி நன்றி உரை கூறி வேகமாக நிகழ்ச்சியை முடித்து வையுங்கள் என்று தெரிவித்து அவசர அவசரமாக முடித்து வைத்தனர். திமுக எம்பியும், எம்எல்ஏவும் பொதுமக்கள் முன்னிலையில் “போடா வாடா” என சண்டையில் ஈடுபட்டதால் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில், எம்.எல்.ஏ.மகாராஜனுக்கு கண்டனம் தெரிவித்து தங்கதமிழ்செல்வனுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டியதால் பரபரப்பு நிலவுகிறது. ஆண்டிப்பட்டி கிழக்கு, மேற்கு, ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் என குறிப்பிடப்பட்ட அந்த போஸ்டரில்,” 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வனை ஒருமையில் பேசிய ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மன்னிப்பு கேட்க வேண்டும் கட்சியினரை மதிக்காத அவர் மீது தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஒரே கட்சியை சேர்ந்த எம்பி, எம்எல்ஏவும் மோதிக்கொண்ட நிலையில், எம்எல்ஏ வை கண்டித்து திமுகவினரே போஸ்டர் ஒட்டிய விவகாரம் ஆண்டிப்பட்டி திமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே எம்எல்ஏ மகாராஜன் உத்தரவின் பெயரில் இந்த போஸ்டர்களை ஒட்டியது யார்? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். மேலும் தங்கத்தமிழ்செல்வன் ஆதரவாளர்கள் இந்த போஸ்டர்களை படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal