தமிழ்நாட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில்தான், ‘‘ஆறரை கோடி தமிழ்நாட்டு வாக்காளர்களில் புதிதாக 2 கோடி வட மாநிலத்தவர் இணைந்தால் அது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் குறைந்தபட்ச அரசியல் அதிகாரத்தையும் பறித்துவிடும்” என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
‘‘வாக்காளர் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமை பறிப்பை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்’’ என்று சீமான் தெரிவித்திருக்கிறார்.
இதே போல், ‘‘வட மாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழக அரசியல் தலைகீழாக மாறிவிடும்’’ என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ‘‘எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். சிறுபான்மை, பட்டியலின மக்களின் வாக்குகளை நீக்கும் முயற்சி மேற்கொள்ளப்படலாம் என சந்தேகம்’’ என அவர் தெரிவித்தார்.
