தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருந்தாலும் தற்போதே சில நிறுவனங்கள் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தற்போது இரண்டு நிறுவனங்களின் கருத்துக்கணிப்புகளைப் பார்ப்போம்..!
‘வோட் வைப்’!
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘வோட் வைப்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், திமுக அரசுக்கு எதிராக 41% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அதேசமயம், 31% பேர் திமுக அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், தற்போதைய எம்.எல்.ஏ.க்களை மாற்ற 61% பேர் விரும்புவதாக தெரிவித்துள்ளனர். இதன்மூலம், பல சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்கள் யாரை நம்புகிறார்கள் என்ற கேள்விக்கு, 37% பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேசமயம், அதிமுக- பாஜக கூட்டணி 32% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (டி.வி.கே) கட்சி, தற்போது மூன்றாவது விருப்பமாக வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்த ஆய்வில், பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு செப்டம்பர் 2024-ல் பதிவு செய்யப்பட்ட தவெக கட்சிக்கு 12% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக அரசு தற்போது முன்னிலையில் இருந்தாலும், அதிமுக- & பாஜக கூட்டணிக்கும் மாநிலத்தில் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது. ஆய்வின்படி, சுமார் 42% பேர் இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று பார்க்கிறார்கள். அதேசமயம், 35% பேர் மோசமான கூட்டணியாக கருதுகின்றனர். அதிமுக- பாஜக கூட்டணி 2026 தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை இந்த கருத்துக்கள் காட்டுகின்றன.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்கள் யாரை நம்புகிறார்கள்.. அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் யார் மூலம் தமிழ்நாடு முன்னேறும் என்று நம்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, 37% பேர் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். அதேசமயம், அதிமுக- பாஜக கூட்டணி 32% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால், ஆட்சிக்கு வந்தால் பாஜகவும் ஆட்சியில் பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கிறார். இந்த மோதல் இருந்தாலும் கூட சுமார் 42% பேர் இந்த அதிமுக – பாஜக கூட்டணி வெற்றிக்கூட்டணி என்று பார்க்கிறார்கள்.
‘அக்னி நியூஸ்’!
அதேபோல் தமிழ்நாட்டில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்றால், திமுக கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெறும் என அக்னி நியூஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 21,150 பேரின் கருத்துக்களின் அடிப்படையில் முடிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தக் கணிப்பு அக்னி நியூஸ் சேனல் மூலம் எடுக்கப்பட்டது ஆகும்.
திமுக கூட்டணி 164 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணி வெறும் 70 இடங்களை மட்டுமே பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலில், அதிமுக மற்றும் அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவைச் சந்திக்கும் என கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அந்த அரசியல் கட்சிகளுக்கு ஒரு எச்சரிக்கையாகும். முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலில் திமுக 39 இடங்களில் வெல்லும் என்று இந்த நிறுவனம் துல்லியமாக கணித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் முடிவுகள் குறித்து வெளியான இந்த கணிப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கணிப்பு, அரசியல் கட்சிகளின் வியூகங்களை மறுபரிசீலனை செய்யத் தூண்டும் வாய்ப்புள்ளது. மேலும், வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதில் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் இது உணர்த்துகிறது. இந்த மதிப்பீடு, வாக்காளர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தேர்தலுக்கு 8 மாதங்கள் இருக்கும் முன்பே வெளியான கணிப்புகள் இது… தேர்தல் என்பது கடைசி ஒரு மாதம் அல்லது 20 நாட்களில்தான் நிலைமையே தலைகீழாக மாறும். அந்த வகையில் தி.மு.க. மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது அ.தி.மு.க. அரியணையில் அமருமா? விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
