‘தி.மு.க. – பா.ஜ.க.வுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கூட்டணி கிடையாது. இது உறுதியான, இறுதியான முடிவு’ என த.வெ.க.தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையை அடுத்த பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் சென்னையில் நாளை மறுநாள் ஜூலை 6 ஆம்தேதி நடைபெறும் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கோரும் ஆர்ப்பாட்டம், விஜய்யின் தமிழ்நாடு தழுவிய சுற்றுப்பயண ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகின்றன.

இந்நிலையில் தவெக செயற்குழு கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக தவெக தலைவர் விஜய் அறிவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திக்க இருக்கிறது தவெக. தவெக அறிவிப்பால், அக்கட்சி பாஜக – அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைக்க பாஜக திட்டமிட்டு வந்த நிலையில், அந்தக் கூட்டணியில் தவெக இணையாது எனத் தெரிகிறது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்விக்கு நல்லதே நடக்கும் எனக் கூறி இருந்தார். அதிமுக இரண்டாம் கட்டத் தலைவர்களும் தவெக, தங்கள் கூட்டணியில் இணையக்கூடும் எனப் பேசி வந்தனர். இந்தச் சூழலில் தவெகவின் அறிவிப்பால் தமிழ்நாட்டில் தவெக-வை இணைத்து மெகா கூட்டணி அமைக்கும் பாஜக – அதிமுகவின் முயற்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தவெக அறிவிப்பால் தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ‘பா.ஜ.க.வுடன் கூனிக்குறுகி கூட்டணி வைக்க தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ கிடையாது த.வெ.க.!’ என விஜய் அடித்துப் பேசியிருக்கிறார். தவிர, தமிழக வெற்றிக் கழகத் தலைமையின் கீழ்தான் கூட்டணி அமைக்கப்படும் என்பதிலும் விஜய் உறுதியாக இருக்கிறார்.

ஆக மொத்தத்தில் முதல்வர் வேட்பாளர் விஜய்தான் என த.வெ.க. செயற்குழுவில் உறுதியான, இறுதியான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal