‘வயது முதிர்வால் ஐயா (டாக்டர் ராமதாஸ்) குழந்தையாக மாறிவிட்டார்’ என அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது, ராமாதாஸின் விசுவாசிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகன் மற்றும் கட்சியின் தலைவரான அன்புமணிக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. கட்சியின் தலைவராக தானே இனி செயல்படுவேன் என ராமதாஸ் அறிவித்தாலும், கட்சி தலைவராக தானே தொடர்வதாக அன்புமணி தெரிவித்து வருகிறார். இதனிடையே, பல செய்தியாளர் சந்திப்பில், தனது மகனுக்கு தலைமை பதிவிக்கான அம்சம் இல்லை என்பது உட்பட ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வெளியிட்டு வருகிறார். ஆனால், தனது தந்தையை ஐயா என்றே மரியாதையுடன் அழைத்து வந்த அன்புமணி, தற்போது கடுமையாக விமர்சித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் பாமகவின் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு தலைமை தாங்கி பேசிய அன்புமணி, பாமகவில் நிலவும் பிரச்னை தொடர்பாகவும், நிறுவனர் ராமதாஸ் தொடர்பாகவும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘‘கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் ஐயாவாக இல்லை. வயது முதிர்வின் காரணமாக அவர் குழந்தை போல் மாறிவிட்டார். அவருடன் இருக்கும் 3 பேர் தங்கள் சுயலாபத்துக்காக, அவரை பயன்படுத்திக் கொள்கின்றனர். அது தெரிந்த பிறகு தான் நான் தலைவராக ஒப்புக்கொண்டேன். அவரை யாரும் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்யக்கூடாது. அவர் சொல்லிதான் பாஜவுடன் 2024ல் கூட்டணி பேசினேன். அதிமுகவுடன்தான் கூட் டணி வைக்க வேண்டும் என்று அப்போதே என்னி டம் சொல்லி இருந்தால் நான் ஏன் வேண்டாம் என சொல்ல போகிறேன். அவர் சரி என்று சொல்லியதால் தான் பாஜலினர் தைலாபுரம் வீட்டுக்கு வந்தனர்.

மோடி, அமித் ஷா, சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி ஆகியோருடன் கூட்டணி பேசியிருக்கிறேன். யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் சொல்கிறாரோ அவருடன் எல்லாம் இத்தனை ஆண்டுகளாக நான் கூட்டணியை பேசி முடித்தவன். பாஜகவுடன் கூட்டணி வைக்க சொன்னதால் தான் கூட்டணி பேசினேன். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைக்க சொன்னதாக அவர் பேசியது பொய். பாஜக எனக்கு மாமனா, மச்சானா? அவர்களுடன் தான் கூட்டணி வைப்பேன் என்று நான் சொல்வதற்கு. 25 ஆண்டுகளாக நான்தான் கூட்டணி பேசி வருகிறேன். அதிமுகவுடன் கூட்டணி பேச வேண்டும் என்று சொன்னால் நான் அப்போதே பேசி இருப்பேன்.

கட்சியில் முழு அதிகாரம் எனக்கு தான். 99 சதவிகித கட்சியினரும் என்னிடம் தான் உள்ளனர் கொள்ளை அடிப்பவனுக்கும், கொலை செய்யவனுக்கும் ராமதாஸ் பொறுப்பு வழங்குகிறார். ஆனால் அது அவரின் சிந்தையில் நடைபெறுவது அல்ல. கட்சி விதிகளின்படி, பொதுக்குழுவை கட்சியின் நிறுவனர் வழிகாட்டுதலின்படி கூட்ட வேண்டும் என்றுதான் உள்ளது. ஆனால், அதிகாரம் மிக்கவர் நிறுவனர் என்று சட்டவிதி கிடையாது. கட் சியின் பொதுக்குழுவை நடத்துவதற்கும், கட்சியை நடத்துவதற்கும் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய மூவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது” என அன்புமணி கூட்டத்தில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமதாஸின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல் வந்த அன்புமணி, நிர்வாகிகள் கூட்டத்தில் வயது முதிர்வு காரணமாக தனது தந்தை கோளாறாக பேசுவதாக நாசுக்காக பேசியுள்ளார். இது கட்சிக்குள்ளேயே பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal