‘‘தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வலுவான கூட்டணி. இந்த கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சி செய்கின்றனர்’’ என ஜி.கே.வாசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
சேலம் அஸ்தம்பட்டியில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘‘தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. எங்களது கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். எங்களுடைய கூட்டணி ஆட்சி அமைக்கும் என சமீப காலமாக தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது. மக்கள் விரோத தி.மு.க. அரசை அகற்ற வேண்டும் எனில், தமிழகத்தில் எதிர்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க.வின் 4 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் -ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளின் மூலம் மக்கள் மீது சுமைகளை ஏற்றி வருகிறது.
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பாலியல் கொடுமை அதிகமாக உள்ளது. அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பலத்தை இழந்து வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் யார் முதலமைச்சர் என்று அனைவருக்கும் தெரியும்.
விவசாய பயன்பாட்டிற்கான நிலத்தடி நீருக்கு கட்டணம் என்பது தவறான தகவல். இதை திட்டமிட்டு சிலர் பரப்பி வருகின்றனர். சமீபத்தில் நடந்த அரசு தேர்வில் தி.மு.க. தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற கேள்விகள் தவிர்க்கப்பட வேண்டும்.
அரசியல் கலப்பு இல்லாமல் அரசு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வலுவான கூட்டணி. இந்த கூட்டணி குறித்து குழப்பத்தை ஏற்படுத்த தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சி செய்கின்றனர். ’’இவ்வாறு அவர் கூறினார்.