லட்சக்கணக்கான ரசிகர் பட்டாளங்களை வைத்திருக்கும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் யாருக்கு பாதிப்பு என பட்டிமன்றமே நடந்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் த.வெ.க. தலைவர் விஜய் படம், கட்சிக் கொடி பறந்த நிகழ்ச்சிதான் காவலர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் மாணவர்களுடனான அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க இருந்தார். அவருடன் அமைச்சர் சாமிநாதன், கவிஞர் வைரமுத்து மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கவிருந்தனர். காலை 10.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கப்படவிருந்த நிலையில், காலை 8 மணி முதலே மாணவர்கள் கலைவாணர் அரங்கில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், பலத்த பாதுகாப்புக்கு பின்னரே மாணவர்கள் அனுமதிக்கப்பட்டவர். அவர்கள் தங்கள் கைகளில் எதையும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் மேடையில் நின்றிருந்த தொகுதிப்பாளர் ஒருவர், முதல்வர் ஸ்டாலின் வந்த பின் நிகழ்ச்சி இனிதே தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார். அப்போது நடு வரிசையில் அமர்ந்திருந்த சில மாணவர்கள் தங்களின் சட்டை பையில் இருந்த தவெக தலைவரும், நடிகருமான விஜய் புகைப்படத்தையும், தவெக கொடியையும் திடீரென உயர்த்தி காட்டினர். இது அங்கிருந்த பாதுகாவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்பின் உடனடியாக பாதுகாவலர்கள் விஜய் படத்தையும், தவெக கொடியையும் கைப்பற்றினர். அதேபோல் அங்கிருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அந்த மாணவர்கள் நியூ கல்லூரி மாணவர்கள் என்ற முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் சோதனை முறையாக இருந்திருந்தால் தவெக கொடி கொண்டு வந்திருக்க முடியாது. இதனால் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் தவெகவைச் சேர்ந்தவர்களா என்ற விசாரணையும் நடந்து வருகிறது. முதல்வர் கலந்துகொள்ளும் நிகழச்சியில் விஜய் படத்துடன் வந்த மாணவர்களால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.