எடப்பாடி பழனிசாமி குறித்து கேலி சித்திரம் வெளியிட்டதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழக அமைச்சருமான டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப் பேரவை எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இருப்பது போல் அரை நிர்வாண கோலத்தில், ஆபாசமாக உண்மைக்கு புறம்பான செய்தியுடன் சமூக வலைதளங்களில், திமுக தகவல் தொழில்நுட்ப அணி கேலி சித்திரம் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
எனவே அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தலைமையிலான தகவல் தொழில்நுட்ப பிரிவு மீது உரிய நடவடிக்கை கோரியும், அந்த கேலி சித்திரத்தை உடனடியாக நீக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் அதி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி மாவட்டம் துறையூரில் நடந்த ஆர்ப்பாட்டம்தான் மிகுந்த கவனத்தை ஈர்த்திருக்கிறது. துறையூர் அ.தி.மு.க. நகரச் செயலாளர் அமைதி பாலு தலைமையில் துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையாவிடம் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாக கலந்துகொண்டு புகார் மனுக்களை வழங்கினர். இந்நிகழ்வில் ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டதால் துறையூர் நகரமே ஸ்தம்பித்துப் போய்விட்டது.
இது பற்றி ‘அமைதி’ பாலுவிடம் பேசியபோது, ‘‘சார் அம்மாவின் (ஜெயலலிதாவின்) மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க.வை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வருகிறார். ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்திய தி.மு.க.வால் 2011ல் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கூட பிடிக்க முடியவில்லை. ஆனால், பத்து ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிறகு, வலுவான எதிர்க்கட்சித் தலைவராக அமர்ந்தார் எடப்பாடி பழனிசாமி.
தவிர, எத்தனையோ துரோகிகளாலும், ஒரு செங்கலைக் கூட உருவமுடியவில்லை. இந்த நிலையில்தான், எங்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியாரை விமர்சிக்கத் தகுதியில்லாத அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையின் கீழ் செயல்படும் தி.மு.க. ஐ.டி. விங்கினர் கேவலமான கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளனர். இது மிகவும் கண்டிக்கத் தக்கது.
அரசியல் களத்தில் இது மிகவும் ஒரு அநாகரீகமான செயல். எனவே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மண்ணார்குடி தொகுதியில் டி.ஆர்.பி.ராஜா மண்ணைக் கவ்வுவது நிச்சயம்’’ என்றார் ஆவேசத்துடன் அமைதி பாலு!