சொந்த சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அதில், அதிமுக முன்னாள் அமைச்சரான சண்முகநாதன் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தனது மனைவி அனுஷா உடன் கூட்டு சேர்ந்து தனது சொந்த சகோதரி பொன்னரசியின் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில், ரூ.17 கோடி பணம் முதலீடு செய்ய வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

போலீசார் தன் மீது வழக்கு பதிவு செய்த தகவல் அறிந்து முன்னாள் அதிமுக அமைச்சரின் மகன் எஸ்பிஎஸ்.ராஜா தலைமறைவாக இருந்து வந்தார். மலேசியா நாட்டிற்கு தப்பி செல்ல முயன்ற எஸ்பிஎஸ்.ராஜாவை போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தூத்துக்குடி அதிமுக பகுதி செயலாளர் எஸ்பிஎஸ்.ராஜா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது; தூத்துக்குடி தெற்கு மாவட்டம் கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்;

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.எஸ். ராஜா, ( தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளர் ) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal