தி.மு.க.வின் சீனியரும், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்கள் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் மூலம் சொத்துக்கள் வாங்கிக் குவித்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
அவரது மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதி திமுக எம்பியாக இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் கே என் நேருவின் சகோதரர்களான ரவிச்சந்திரன், மணிவண்ணன், கே என் நேருவின் மகனான அருண் நேரு ஆகியோரை குறி வைத்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அலுவலகங்கள் வீடுகள் கட்டுமான நிறுவனங்களில் கடந்த ஏழாம் தேதி காலை 6:00 மணி முதல் 10 மணி நேரத்திற்கு மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அது மட்டும் அல்லாமல் அமைச்சர் நேருவின் சகோதரியான உமா மகேஸ்வரி மற்றும் டிவிஎச் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அது மட்டுமல்லாமல் சென்னையில் உள்ள நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் வீடு அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
அதில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திடீரென காரில் அழைத்துச் சென்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரவிச்சந்திரன் வாக்குமூலமும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டது. 5 மணி நேர விசாரணை முடிந்த நிலையில் மீண்டும் அவரை விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர்.
ஆனால் அவர் உடல் நலக் குறைவு என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மூன்று நாட்களாக சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள ரவிச்சந்திரன் இல்லம், கோட்டூர்புரத்தில் உள்ள டிவிஹெச் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அடையாறு காந்தி நகரில் டிவிஎச் நிறுவனத்தின் இயக்குனர் ரமேஷ் வீடு உள்ளிட்டவற்றிலும் சோதனை நடைபெற்றது. இந்த நிலையில் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக அதிரடியாக கூறியுள்ளது அமலாக்கத்துறை.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில், ‘‘அமலாக்கத்துறை சென்னை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தியது. கேஎன் ரவிச்சந்திரன், அருண் நேரு எம்பி ஆகிய நபர்களிடமிருந்து முக்கிய ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அமைச்சர் கேஎன் நேருவின் உறவினர் வீடுகளில் நடந்த சோதனைகளையும் பல முக்கிய ஆதாரங்கள் அமலாக்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் பணியிட மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன. திட்டமிட்ட நோக்கங்களுக்காக பெருமளவில் ஆன பரிவர்த்தனை நடந்து இருக்கிறது. இது தொடர்பாக டிஜிட்டல் பதிவுகள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. சட்ட விரோத பண பரிமாற்றத்தின் மூலமே வாங்கிய சொத்துக்கள் மற்றும் வருமானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’’ என அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, அமலாக்கத்துறை விசாரணை வளையத்திற்குள் பெரம்பலூர் எம்.பி.யும், அருண் நேருவும் கொண்டுவரப்படுவார் என்ற தகவல்களும் வெளியாகியிருக்கிறது.