‘‘பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை ஒப்பந்ததாரர் மூலம் விற்கக் கூடாது. ஆன்லைன் ஏலமுறையில் விற்பனை செய்ய வேண்டும்’’என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் பகுதிகளில் இயங்கி வந்த மணல் குவாரிகளில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து 2013ம் ஆண்டில் அங்கு செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டன. அங்கிருந்து எடுக்கப்பட்டு யார்டுகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
அதில் ஒரு பகுதி அப்போதே ஏல முறையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மணலை இப்போது விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இது நல்ல முடிவு தான். அரசின் சொத்துகள் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக விற்பனை செய்யப்பட வேண்டும். பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் உள்ள மணலை அரசு தான் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். மாறாக, தனியார் மூலம் விற்பனை செய்யப்படும் போது அரசுக்கு வருமானம் கிடைக்காது.
அதே நேரத்தில் தனியார் அதிக விலைக்கு விற்பனை செய்யும் போது பொதுமக்களுக்கு இன்னும் அதிகமான விலையில் தான் மணல் கிடைக்கும். அதனால், கட்டுமானச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்லைன் முறையில் பொது ஏலம் மூலம் மணலை விற்பனை செய்யலாம். தேவையான பொதுமக்கள் ஆன்லைன் முறையில் மணலை ஏலத்தில் எடுத்துக் கொள்ள முடியும். ஒப்பந்ததாரர் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்’’ இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.