‘‘உலகில் சாதனை படைக்க வயது மற்றும் பாலினம் ஒரு தடையல்ல’’ என்று தனது வலைதளப் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பதிவிட்டிருப்பதுதான் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது.

இது தொடர்பாக தனது வலைதளப் பக்கத்தில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, ‘‘அனைவருக்கும் வணக்கம் இன்று காலை எழுந்தவுடன் எனக்கு முதலில் தோன்றியது சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட நால்வர் எந்தவித சேதாரமும் இன்றி பூமிக்கு வந்துவிட்டனரா என்று நினைத்தேன். அதே போல் அவர்கள் பூமிக்கு வந்தடைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
எத்தனை பேருக்கு தெரிகிறதோ இல்லையே… இந்த இரண்டு வாரங்கள் இரண்டு பிரம்மிப்பூட்டும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒன்று இசைஞானி இளையராஜா அவர்கள் இங்கிலாந்து சென்று இசை நிகழ்ச்சியை அரங்கேற்றி உலகிற்கே வயது ஒரு தடையல்ல… சாதி ஒரு தடையல்ல… என்று சமுதாயத்திற்கும் உலகிற்கும் உணர்த்தியுள்ளார்.
அதேபோல், சுனிதா வில்லியம்சும், புட்ச் அவர்களும் பாலினம் ஒரு தடையல்ல… எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டால் யாராலும் எந்த நேரத்திலும், எந்த வயதிலும், எந்த இடத்திலும் வெற்றி அடையலாம் என்று இந்த உலகத்திற்கு நம்பிக்கையை தந்துள்ளார்கள் இவர்கள் இருவரும்.
இந்த நல்ல நாளில் அவர்களை வாழ்த்தி மகிழ்வோம்… நன்றி, வணக்கம்..!’’ என பதிவிட்டிருக்கிறார் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா!
முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணாவின் இந்தப் பதிவுதான் சிந்திக்க வைக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதாவது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் அமெரிக்காவில் சாதித்துக் காட்டியிருக்கிறார். இந்தியாவில் சாதிக்க வாய்ப்பில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
அதே சமயம், விண்வெளி முதற்கொண்டு அரசியல் களம் வரை இந்தியா முதற்கொண்டு தமிழகம் வரை ஆணாதிக்கம் நிறைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, இனியாவது பெண்களுக்கு அரசியல் கட்சிகள் முதற்கொண்டு ஆராய்ச்சி நிலையங்கள் வரை வாய்ப்புகள் வழங்கப்படுமா? முன்னுரிமை அளிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்!