முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று தனியாக சபாநாயகரை சந்தித்து பேசிய விவகாரம்தான் அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல்கள் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சமீபத்திய நடவடிக்கைகள் அதற்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன.
தமிழ்நாடு அரசு நேற்று சட்டமன்றத்தில் 2025 – 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கமாக செல்லக் கூடிய பாதையில் அவைக்குள் சென்ற போது, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் உடன் சேர்ந்து அந்த பாதையில் செல்லாமல், சபாநாயகர் செல்வதற்கான உள்ள பாதை வழியாக அவைக்குள் சென்றார்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்து பேசுவதை தவிர்ப்பதற்காகவே செங்கோட்டையன் அந்த பாதையில் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அதேபோல் எடப்பாடி பழனிசாமி அவைக்குள் வந்த போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். அந்த சமயம் செங்கோட்டையன் எழுந்து நின்றாரே தவிர எடப்பாடி பழனிசாமியை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்ப்பதற்காக திரும்பிக்கொண்டார்.
அவை தொடங்கிய் உடனேயே டாஸ்மாக் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்கலாம் என்ற செய்தி அறிக்கை ஆகியவை குறித்து விவாதிக்க அனுமதி கேட்கப்பட்டது. அதற்கு சபாநாயகர் அனுமதி மறுக்கவே அதிமுகவினர் பட்ஜெட் தாக்கல் செய்வதை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
செங்கோட்டையனும் அப்போது அவையில் இருந்து வெளியேறினார். ஆனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லும் பாதையில் செல்லாமல் வந்த வழியிலேயே சபாநாயகருக்கான பாதை வழியே வெளியேறினார்.
வெளிநடப்பு செய்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்கட்சித் தலைவர் அறையில் காத்திருந்தனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். ஆனால் இதில் எதிலும் செங்கோட்டையன் கலந்து கொள்ளவில்லை. அவையில் இருந்து வெளியேறியதும் தனது கார் மூலம் தலைமைச் செயலக வளாகத்திலிருந்து சென்று விட்டார்.
இந்த நிலையில்தான் இன்றைய தினம் சபாநாயகர் தனபாலை அவரது அறையில் தனியாக சந்தித்து சுமார் 15 நிமிடம் பேசினார் கே.ஏ.செங்கோட்டையன். இந்த விவகாரம்தான் தற்போது அ.தி.மு.க.வில் மேலும் புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.